×

தண்ணீர் திறக்க மீண்டும் மீண்டும் மறுக்கும் கர்நாடக அரசு!: டெல்லியில் நாளை மறுநாள் காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்..!!

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் நாளை மறுநாள் டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரியில் கர்நாடகா நீர்திறக்க மறுப்பு தெரிவித்த நிலையில் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காவிரி மேலாண் ஆணைய உத்தரவை கடைபிடிக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, காவிரி ஒழுங்காற்று குழுவின் 87வது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. செப்டம்பரில் நிலுவையில் உள்ள 7 டிஎம்சி நீரையாவது உடனடியாக திறக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது.

தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. காவிரி படுகையில் உள்ள 32 தாலுகாக்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்தது. தமிழ்நாட்டுக்கு காவிரியில் விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்திருந்தது. செப்.28 முதல் அக்.15 வரை தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. தமிழகத்திற்கு 3000 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ள நிலையில் பின்பற்ற கர்நாடகா மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் நாளை மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி பாசன பகுதியில் பெய்த மழை நிலவரம் குறித்து, பிலிகுண்டுலுவில் குறைந்த அளவே நீர்வரத்து குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடகா மீண்டும் மீண்டும் மறுக்கும் நிலையில் முக்கியத்துவம் மிக்க கூட்டமாக கருதப்படுகிறது.

The post தண்ணீர் திறக்க மீண்டும் மீண்டும் மறுக்கும் கர்நாடக அரசு!: டெல்லியில் நாளை மறுநாள் காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka Govt ,Kaviri Management Commission ,Delhi ,Caviri Management Commission ,Karnataka ,Cavieri ,Govt ,Dinakaran ,
× RELATED தெலங்கானா தேர்தல் கர்நாடகா அரசு மீது...