*மருத்துவ இணை இயக்குனர் தகவல்
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கொசு வலையுடன் கூடிய தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. காலை முதலே மழை தொடங்கி இரவு வரை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அனைத்து பகுதிகளிலும் நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில் தற்போது திருப்பத்தூர் பகுதிகளில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் குடியிருப்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் நல்ல தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி உள்ளது. டெங்கு கொசு கடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் டெங்கு மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் அதிகளவில் பரவி நாள்தோறும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சுமார் 500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழைய டயர் பானை ஓடுகள், உள்ளிட்டவைகளை அகற்றும் பணியில் டெங்கு ஒழிப்பு ஊழியர்கள் ஈடுபட வேண்டும். இந்த டெங்கு ஒழிப்பு பணி மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து மாவட்ட மருத்துவ இணையை இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றம்பள்ளி உள்ளிட்ட நான்கு அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கொசுவலைகள் கட்டப்பட்டு பிரத்யே வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாள்தோறும் சளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமான நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். அவர்களுக்கு அனைத்து வகையான காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பகல் நேரங்களில் கடிக்கும் கொசுவினால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இதனால் பகல் நேரங்களில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் வீட்டில் இருக்கும் போது மின்விசிறி, கொசுவர்த்தி உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
டெங்கு காய்ச்சல் வந்துவிட்டால் அதற்காக யாரும் பயப்படத் தேவையில்லை. இதற்கான தடுப்பு மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் உள்ளது. மேலும், கிராமப்புற பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல் வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் செல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பெருகிவரும் போலி டாக்டர்கள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகளவில் காய்ச்சல், சளி உள்ளிட்டவைகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிராமப்புற பகுதிகளில் போலி மருத்துவர்கள் மொபைல் சர்வீஸ் மூலம் சிகிச்சை அளிக்க வருகின்றனர்.
குறிப்பாக திருப்பத்தூர் அடுத்த பொம்மிக்குப்பம், புதூர் நாடு, ஏலகிரி மலை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலி மருத்துவர்கள் அதிகளவில் உள்ளனர் அவர்களிடம் இந்த கிராமப்புற பகுதி மக்கள் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
டெங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி?
திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவகுமார் கூறுகையில், டெங்கு காய்ச்சல் என்பது பகல் நேரங்களில் கடிக்கும் கொசுவால் ஏற்படுகிறது. இதனால் முதலில் குழந்தைகள் முதல் பெரியோர்களுக்கு விடாமல் தொடர் காய்ச்சல் அடித்து வரும். அதே போல் ரத்தத்தில் உள்ள தட்டு அணுக்கள் குறையும். இதனை கவனிக்காமல் விட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையில் வந்து ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். டெங்குவை பற்றி யாரும் பயப்பட வேண்டாம். டெங்கு என்பது ஒரு சாதாரண நோய் தான் அதனை விரைவாக குணப்படுத்த முடியும். அதனை முதலில் கண்டறிய வேண்டும் என்று தெரிவித்தார்.
The post திருப்பத்தூர் மாவட்டத்தில் மழையால் முன்னெச்சரிக்கை டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் தனி வார்டு appeared first on Dinakaran.