
*சேறும், சகதியுமானதால் வியாபாரிகள் அவதி
வேலூர் : வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தைக்கு தொடர் மழையின் காரணமாக கால்நடைகள் வரத்து நேற்று குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கடந்த வாரத்தை விட நேற்று கால்நடைகளின் வரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. ஆயிரத்துக்கும் குறைவாக மாடுகள், இதர கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. குறிப்பாக கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள், அடிமாடுகள் விற்பனைக்கு வந்தது. இதனால் நேற்று சுமார் ₹80 லட்சத்துக்கும் குறைவாக வர்த்தகம் சுமாராகவே இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சந்தை முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் மாடுகளை கொண்டு வந்த விவசாயிகளும், வியாபாரிகளும் நடந்து கூட செல்ல முடியாத வகையில் அவதிக்கு ஆளாகினர். மேலும் குப்பை தொட்டிகளில் வீசிய குப்பைகள் அனைத்தும் சிதறி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
The post மழையால் வெறிச்சோடிய பொய்கை மாட்டுச்சந்தை appeared first on Dinakaran.