*காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்
அணைக்கட்டு : அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் அருகே அரசு பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.தமிழ்நாடு முழுவதும் புதிதாக கட்டப்பட்ட அரசு பள்ளி வகுப்பறை கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். அதன்படி, அணைக்கட்டு தாலுகா, ஊசூர் அடுத்த தெள்ளூர் ஊராட்சி ஜமால்புரம் அரசு தொடக்கப் பள்ளியில் குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டம் 2022-23ம் நிதியாண்டில் ₹27.32 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார்.
இதையொட்டி, பள்ளியில் நடந்த விழாவிற்கு தெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவி சுரேஷ் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செந்தில், மாவட்ட கல்வி அலுவலர் மணிமொழி, தாசில்தார் வேண்டா, மாவட்ட கவுன்சிலர் த.பாபு, வேலூர் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ஞானசேகரன், துணைத்தலைவர் மகேஸ்வரி காசி, பிடிஓக்கள் வின்சென்ட் ரமேஷ்பாபு, சரவணன், ஒன்றிய கவுன்சிலர் அம்மு பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து, அதே பள்ளியில் படிக்கும் மாணவிகளை புதிய வகுப்பறை கட்டிடங்களை திறக்குமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டார். அதன்பேரில், மாணவிகள் பள்ளி வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இதேபோல், வேலூர் ஒன்றியம், ஊசூர், சிவநாதபுரம், கருகம்பத்தூர், மேல்மொணவூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில் புதிதாக கட்டிய வகுப்பறைகள் திறப்பு விழா நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் அமுதா ஞானசேகரன் தலைமை தாங்கி கட்டிடங்களை திறந்து வைத்தார். மேலும், அணைக்கட்டு ஒன்றியம், வரதலம்பட்டு, ராஜாபுரம், அன்னாசிபாளையம் கிராமங்களில் புதிதாக கட்டிய பள்ளி வகுப்பறை கட்டிடங்களை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு திறந்து வைத்தார். விழாவில் ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் அடுத்த கவசம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ₹28.68 லட்சம் மதிப்பில் கூடுதலாக 2 வகுப்பறைகள் மற்றும் வடுகன்தாங்கல் ஊராட்சி, சின்ன வடுகன்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ₹28.80 லட்சம் மதிப்பில் கூடுதலாக 2 வகுப்பறைகள் புதிதாக கட்டப்பட்டது. இந்த பள்ளி கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
இதையொட்டி பள்ளியில் நடந்த விழாவிற்கு பிடிஓ கல்பனா தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் சரளா கலைவாணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜம்புலிங்கம், ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் கீதா வரேவற்றார். ஒன்றியக்குழு தலைவர் ரவிச்சந்திரன் ரிப்பன் வெட்டி வகுப்பறைகளை திறந்து வைத்தார்.
இதேபோல், குடியாத்தம் அடுத்த உள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, பள்ளியில் நடந்த விழாவில் எம்எல்ஏ அமுலு விஜியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
காலை உணவு திட்டத்தை பாராட்டிய மாணவி
ஜமால்புரம் அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாணவ, மாணவிகளுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது, ஒருமாணவி முதல்வரின் காலை உணவு திட்டத்தால் பயனடைந்து வருவதாகவும், இந்த திட்டம் மனநிறைவு அளிப்பதாகவும் அனைவரது முன்னிலையில் விரிவாக பேசினார். அச்சமின்றி தெளிவாக பேசிய மாணவிக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
The post அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் அருகே அரசு பள்ளிகளில் புதிதாக கட்டிய வகுப்பறைகள் appeared first on Dinakaran.