×

மழை காலத்தை எதிர்கொள்ள ஒவ்வொரு துறையினரும் அவசர காலத் திட்டத்துடன் தயாராக இருப்பது அவசியம்

*அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 24 இடங்களில் ஆய்வு

*உடனடி தகவல்களை டிஎன் ஸ்மார்ட் ஆப்பில் பெறலாம்

*ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்

திண்டுக்கல் : மழை காலத்தை எதிர்கொள்ள ஒவ்வொரு துறையினரும் அவசர காலத் திட்டத்துடத்துடன் தயாராக இருக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: வடகிழக்கு பருவ மழைக் காலம் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இப் பருவமழை காலங்களில் பெய்யக்கூடிய கன மழையினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 84 இடங்கள் பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாக கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு, அதில் 24 இடங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 4 இடங்கள் நடுத்தர பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 56 இடங்கள் குறைவான அளவு பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, அந்த இடங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை கண்காணிக்க மற்றும் ஒருங்கிணைக்க மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. இந்த குழுக்கள் கனமழை, புயல், வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்படும் சேதங்களை சரி செய்யவும், பாதிப்புகளால் இன்னலுரும் பொதுமக்களை மீட்டு தேவையான வசதிகள் செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் எதிர்பாராமல் ஏற்படும் புயல், மழை வெள்ள பாதிப்புகளைத் தடுக்கவும், மழை காலத்தை எதிர் கொள்ளவும், ஒவ்வொரு துறையினரும் அவசர காலத் திட்டம் தயாரித்து வைத்திருக்க வேண்டும்.வெள்ளம் பாதித்த பகுதிகளில் உபயோகப்படுத்த தேவையான வயர்லெஸ் கருவிகளை தயார் நிலையில் வைத்து, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பல்வேறு துறைகளுடன் இணைத்து செயல்பட வேண்டும்.

காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் வட்டார வாரியாக மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக போக்குவரத்து திட்டம் மற்றும் மீட்புக் குழுவிற்கான பசுமை தாழ்வாரங்கள் ஏற்படுத்திட வேண்டும்.

மீட்புப் பணிக்கு தேவைப்படும் ரப்பர் படகுகள், மிதவைப் படகுகள் மற்றும் ரப்பர் டிங்கிகள் ஆகியவை போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர் காக்கும் மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். கனமழை காரணமாக தொற்று வியாதிகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேவையான மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவக் குழு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

படகுகள், கட்டுமரம் மற்றும் படகு இயக்குபவர்கள், நீச்சல் வீரர்கள் ஆகியோர்களை அவசர காலத்தில் பயன்படுத்திட ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள், கட்டடங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றை தணிக்கை செய்து அவற்றின் கட்டட உறுதித்தன்மை, மின் வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை உறுதி செய்திட வேண்டும். அவர்களுக்கு உணவு வசதிகள் செய்வதற்கு தயார் நிலையில் இருத்தல் வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் குடிமைப்பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைத்திட வேண்டும்.

மரங்கள் சாய்ந்து சாலையில் விழுவதால் வாகனப் போக்குவரத்து தடை ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றின் அலுவலர்களைக் கொண்ட மீட்புக்குழு அமைத்து போக்குவரத்தை உடனுக்குடன் சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சேதமடையும் மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை உடனடியாக மாற்றுவதற்கு தேவையான உபகரணங்கள், கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களுக்கு தேவையான மருந்துகள் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திட வேண்டும்.

வடகிழக்கு மருவமழை காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விபரங்களை உரிய படிவங்களில் தினமும் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து துறை மாவட்ட அலுவலர்களும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த, துறையின் மூலம் பயன்பெறும் பொதுமக்கள் அனைவரும் டிஎன் ஸ்மார்ட் (TN SMART) மொபைல் ஆப் ஐ அவர்களது செல்லிடைப் பேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

மேலும், அனைத்து துறையினரும் வடகிழக்கு பருவமழை காலத்தில், கனமழை, வெள்ளம், புயல் ஏற்படின் அதனை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகளுடன் எப்பொழுதும் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும், என கலெக்டர் தெரிவித்தார்.கூட்டத்தில், டி.ஆர்.ஒ.,சேக் முகையதீன், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் கமலக்கண்ணன், சரவணன், ராஜா, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் சுகந்தி ராஜகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மழை காலத்தை எதிர்கொள்ள ஒவ்வொரு துறையினரும் அவசர காலத் திட்டத்துடன் தயாராக இருப்பது அவசியம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 3...