×

3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் சுருளி சாரல் திருவிழா ஆரம்பம்

*6 நாட்கள் குளு,குளு கொண்டாட்டம்

*கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் ஏராளம்

கம்பம் : கம்பம் அருகே உள்ளது புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவி. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுருளி அருவியில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை திமுக அரசு இருந்தபோது சுற்றுலாத் துறை மூலம் சாரல் விழா நடத்தப்பட்டு வந்தது. இத்தகைய விழா கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு சாரல் விழா சுருளி அருவியில் நடத்தப்படவில்லை. இதன்பின்னர் வைகை அணையில் சுற்றுலாவிழாவாக கடந்த 2017ம் ஆண்டு அதிமுக அரசால் நடத்தப்பட்டது. பின்னர் இவ்விழாவும் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் சாரல் மழை பெய்யும்போது சுருளிஅருவில் சாரல் விழா நடத்துதைக் காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிவது உண்டு. இத்தகைய சாரல்விழா நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு செப்.23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இரு நாட்களில் நடத்தப்பட்டது. இவ்விழாவில் பல்வேறு அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து கலைநிகழ்ச்சிகள், சுற்றுலா பயணிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதன்பிறகு சாரல் விழா நடத்தப்படவில்லை. 2020ம் ஆண்டு கொரோனா நோய்த் தொற்று பரவியதால் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக சுற்றுலாத் துறை மூலம் விழா நடத்தப்படாத நிலை ஏற்பட்டு விட்டது.

இந்நிலையில் சுருளி அருவியில் தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் “சுருளி சாரல் திருவிழா-2023” இன்று முதல் அக்.2ம் தேதி வரை 6 நாட்களுக்கு நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகளுடன் கூடிய விழிப்புணர்வு மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது சுருளி சாரல் திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சிறப்பு பேருந்து, சாலை வசதி, வாகன நிறுத்துமிட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, வனத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூகநலத்துறை, நீர்வளத்துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சிகள் அமைக்கப்பட்டவுள்ளது.

மகளிர் சுய உதவி குழுக்கள் தயார் செய்யும் பொருட்கள் கண்காட்சி மற்றும் சிறுதானிய உணவு வகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனைகளும், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் மலிவு விலையில் வழங்கவுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, மகளிர் திட்டம் சார்பில் கோலப்போட்டி, கலை பண்பாட்டுத்துறை சார்பில் நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சிகள், சமூகநலத்துறை சார்பில் சிலம்பம் கலை நிகழ்ச்சிகள் போன்றவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விழா நடைபெறும் நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும், கிராமிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் விழிப்புணர்வு தூய்மைப்பணிகளும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியும், நெகிழி பொருட்களை தவிர்த்து மாற்றுப்பொருட்களை உபயோகப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு பணிகள் போன்ற பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. சுருளி சாரல் திருவிழா நடைபெறும் நாட்களில் தேனி, உத்தமபாளையம் மற்றும் கம்பத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் சுருளி சாரல் திருவிழா ஆரம்பம் appeared first on Dinakaran.

Tags : Suruli Charal festival ,Gulu,Gulu ,Kampam ,Suruli Charal ,Dinakaran ,
× RELATED கம்பம் மெட்டு அடிவார பகுதியில் இறந்து கிடந்த மிளா மான்: வனத்துறை விசாரணை