×

திருப்பூர் மாவட்டத்தில் முன் பருவக்கல்வி பயிலும் 27 ஆயிரத்து 78 குழந்தைகள்

*கலெக்டர் கிறிஸ்துராஜ் தகவல்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் 1,472 அங்கன்வாடி மையங்களில் 27 ஆயிரத்து 78 குழந்தைகள் முன் பருவக்கல்வி பயின்று வருகின்றனர் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் கீழ் செயல்பட்டு வரும் திருப்பூர் மாநகராட்சி முருகம்பாளையம் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின் கலெக்டர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத முன்னோடி மாநிலமாக மாற்ற சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

திருப்பூர் மாவட்டத்தில் 1303 முதன்மை மையங்களும், 169 குறு மையங்களும் என மொத்தம் 1,472 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. 2 வயது முதல் 6 வயது வரையிலான 27 ஆயிரத்து 78 குழந்தைகள் முன்பருவக்கல்வி பயின்று வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி, முருகம்பாளையம் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் ஒரு சிறப்பான திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் 0-6 வயது குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள் பயன் பெறுகின்றனர்.

இத்திட்டங்களை பயன்படுத்த வருமான வரம்பு ஏதுமில்லை, தகுதியுடைய அனைவரும் தங்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள குழந்தைகள் மையத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 125 கிராம் வீதம் சத்துமாவும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 150 கிராம் வீதம் சத்துமாவும், 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 50 கிராம் வீதம் கொழுக்கட்டை, கஞ்சி மற்றும் உருண்டையாக வழங்கப்படுகிறது. 1 முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வீட்டிற்கே சென்று வழங்கப்படுகிறது.

2 முதல் 6 வருடம் வரையிலான குழந்தைகளுக்கு வாரம் 3 நாட்கள் முட்டையுடன் கூடிய மதிய உணவு அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படுகிறது. 6 மாதம் முதல் 2 வயது வரையிலான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு 60 கிராம் செறியூட்டப்பட்ட பிஸ்கட்களும், 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு 30 கிராம் செறியூட்டப்பட்ட பிஸ்கட்கள் வழங்கப்படுகின்றன.

அங்கன்வாடி மையத்திற்கு வரும் 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆடிப்பாடி விளையாடு பாப்பா பாடத்திட்டத்தின் கீழ் மாதம் ஒரு விளையாட்டு தலைப்பின் மூலம் உடல், மனம், அறிவு, மொழி, சமூக வளர்ச்சியை உருவாக்கும் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கு உணவூட்டுதல், குழந்தைகளின் தந்தைக்கான விழிப்புணர்வு, பொதுசுகாதாரம் ஆகிய சமுதாய நிகழ்வுகள் மாதம் இரு முறை மையத்தில் நடத்தப்படுகின்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் முன்னோடி திட்டமான ‘‘ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் பயனாளர்களான திருப்பூர் மாவட்டத்தில் 0 மாதம் முதல் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 451 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 902 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டக தொகுப்பும், 0 மாதம் முதல் 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 549 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 549 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டக தொகுப்பும் என மொத்தம் 1451 ஊட்டச்சத்து பெட்டக தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 2430 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 8 வாரங்களுக்கு (56 நாட்களுக்கு) வழங்கி குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, வளர் இளம் பெண்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை அங்கன்வாடி மையங்களில் சுகாதாரத்துறை மூலமாக வழங்கப்படுகிறது. மகளிர் தினம், உலக சுகாதார தினம், கர்பிணிகளுக்கு வளைகாப்பு விழா, தாய்பால் வார விழா, ஊட்டச்சத்து வாரவிழா ஆகியவை அங்கன்வாடி மையங்களில் கொண்டாடப்படுகிறது.

அங்கன்வாடி மையங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் கல்வி உபகரணங்கள் விளையாட்டு சாதனங்கள் வழங்கப்பட்டு குழந்தையின் முழுமையான வளர்ச்சி முன் பருவக்கல்வி மூலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post திருப்பூர் மாவட்டத்தில் முன் பருவக்கல்வி பயிலும் 27 ஆயிரத்து 78 குழந்தைகள் appeared first on Dinakaran.

Tags : Tirupur district ,Krishtraj ,Tirupur ,
× RELATED பிரதம மந்திரி திட்டத்தில் விவசாயிகள்...