×

குப்பை கொட்டும் இடமாக மாறிய வேலூர் கோட்டை துர்நாற்றத்துடன் அகழியில் செத்து மிதக்கும் மீன்கள்

*அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

வேலூர் : வரலாற்று நினைவு இடமாக உள்ள வேலூர் கோட்டை அகழியில் குப்பை கொட்டும் இடமாறி உள்ளதால், மீன்கள் செத்து மிதக்கிறது. அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூரில் வரலாற்று புகழ்மிக்க கோட்டை அமைந்துள்ளது. 133 ஏக்கர் பரப்பளவிலான கோட்டைக்கு ஒரே ஒரு நுழைவுவாயில் உள்ளது. கோட்டையை சுற்றிலும் 191 அடி அகலமும், 29 அடி ஆழமும் கொண்ட அகழி அமைந்துள்ளது. ஏராளமான கோட்டைகளின் அகழிகள் தூர்ந்து போய்விட்ட நிலையில், வேலூர் கோட்டை இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹33 கோடி மதிப்பீட்டில் கோட்டையை சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மேம்படுத்தும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இரவு நேரத்திலும் கோட்டை அழகை ரசிக்கும் மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் கோட்டையின் உட்புறம் நடைபாதை, குடிநீர் வசதி, கேன்டீன் வசதி, உணவருந்தும் வசதி, அலங்கார மின்விளக்குகள், ஒளி, ஒலி அரங்கம், கோட்டை அகழியை தூர்வாருதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதில் ஒரு சில பணிகள் மட்டும் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில், கோட்டை அகழியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து குப்பை, கழிவுகளை பொருட்களை அகழியில் சிலர் வீசிவிடுகின்றனர்.

இதனால் அகழியில் வளர்க்கப்பட்டு வந்த மீன்கள் செத்து மிதந்தன. இதனால் துர்நாற்றம் வீசியதால், வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘வேலூர் கோட்டை அகழியை சுற்றி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ேகாட்டை அகழியில் குப்பைகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கேமராக்கள் வைத்து கண்காணிப்பதால் கோட்டையை இரவிலும் வெளிச்சமாக்கும் விளக்குகள் மற்றும் வயர்கள் திருடிச்செல்லும் கும்பலையும் பிடித்துவிடலாம். இறந்து கிடக்கும் மீன்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

அகழியையொட்டி தடுப்புவேலி

வேலூர் கோட்டை பூங்காவும், அகழியும் அருகருகே உள்ளது. இதில் பூங்காவிற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் அகழியின் அருகே செல்கின்றனர். இதில் ஒருசிலர் தவறி விழும் சம்பவங்களுடன் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதை தடுக்கும் வகையில், கோட்டையின் நுழைவு வாயிலில் இடதுபுறமுள்ள அகழியில் 400 மீட்டர் தூரத்திற்கு, 1.20 மீட்டர் உயரத்திற்கு தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவடைந்தும், வலது புறமுள்ள சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு தடுப்பு வேலி அமைக்கப்படும் பணிகள் விரைவில் தொடங்கும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post குப்பை கொட்டும் இடமாக மாறிய வேலூர் கோட்டை துர்நாற்றத்துடன் அகழியில் செத்து மிதக்கும் மீன்கள் appeared first on Dinakaran.

Tags : Vellore Fort ,Vellore ,Dinakaran ,
× RELATED காடுகளில் பதுங்கிய குற்றவாளிகளை...