×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.292 கோடிக்கு கடன் வழங்கி சாதனை

*கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் பெருமிதம்

*மகளிர் முன்னேற்றத்தில் முதல்வர் அக்கறை

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பல்வேறு துறைகள் மூலம் நடப்பாண்டில் ரூ.292 கோடிக்கு கடன் வழங்கி சாதனை படைத்துள்ளது என்று கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் பெருமிதம் தெரிவித்தார்.கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கூட்டுறவுத்துறை சார்பில் கடன்மேளா நிகழ்ச்சி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அருளரசு வரவேற்றார். கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், எம்எல்ஏ முகம்மதுஷாநவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயனாளிகள் 197 நபர்களுக்கு சுய உதவி குழுக்கடன், 357 நபர்களுக்கு கால்நடை பராமரிப்பு கடன், 46 நபர்களுக்கு மத்திய கால கடன், 9 நபர்களுக்கு பண்ணைசாரா கடன், 8 நபர்களுக்கு மீனவர் கடன், 1 நபருக்கு தாட்கோ கடன், 2 நபர்களுக்கு டாப்செட் கடன் என 636 நபர்களுக்கு ரூ.13 கோடியே 64 லட்சம் மதிப்பில் கடன்களை கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் பேசியதாவது:ஒரு மாநிலம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதை அங்குள்ள குடிமக்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதிலும் அந்த மாநிலத்தில் பெண்கள் முன்னேற்றம் அதிக அளவு வளர்ச்சி பெற்றிருந்தால் அந்த மாநிலம் மிகவும் சிறந்த மாநிலமாக கருதப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டில் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பை தொடரும் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, அரசு பஸ்களில் இலவச பயணம், மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை என மகளிர் முன்னேற்றத்தில் அதிக அக்கறையுடன் முதல்வர் செயல்படுகிறார்.

பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், யாரிடமும் தலைகுணிந்து நிற்க கூடாது என்பதற்காகவும் மகளிர் சுய உதவிகுழுவினருக்கு வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கப்படுகிறது. வங்கிகளில் வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் தான் நமது நாடு முன்னேற்றம் அடையும்.

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கூட்டுறவு துறை மூலம் ரூ.10 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இலக்கை தாண்டி நேற்று(26ம் தேதி) ரூ.13 கோடியே 75 லட்சத்திற்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 4 ஆயிரத்து 112 நபர்களுக்கு பயிர் கடனாக ரூ. 25 கோடியே 75 லட்சம், கால்நடை பராமரிப்பு கடனாக ரூ. 1154 நபர்களுக்கு ரூ. 5 கோடி, நகைக்கடனாக 24 ஆயிரத்து 263 நபர்களுக்கு ரூ.124 கோடியே 60 லட்சம் என 30 ஆயிரத்து 619 நபர்களுக்கு ரூ. 292 கோடியே 75 லட்சம் வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்தில் செலுத்தி விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த நம்பிக்கையை நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி துணைபதிவாளர் ஜெகத்ரட்சகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். துணைப்பதிவாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

மீனவர்களுக்கு கடன் வழங்கல்

தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் பேசுகையில், ‘‘நாகப்பட்டினம் மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம், மீன்பிடி தொழில். மீனவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் கூட்டுறவு துறை சார்பில் முதல் முறையாக 8 மீனவர்களுக்கு கூட்டுறவு துறை கடன் வழங்கி இருப்பது மகிழ்ச்சி தருகிறது. மீனவர்கள் தங்களது நகைகளை அடகு வைத்து அதை மீட்க வட்டி மேல் வட்டி கட்டி கஷ்டப்படுவார்கள். இதை போக்கவே கூட்டுறவு துறை சார்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதை மீனவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,’’ என்றார்.

இலக்கை தாண்டி அபாரம்

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு பேசுகையில், ‘‘கலைஞர் நூற்றாண்ண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறை சார்பில் 100 கடன் மேளா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இரண்டு முகாம்கள் நடத்த வேண்டும். இந்த முகாமில் ரூ.10 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் கூட்டுறவு துறையின் அனைத்து தரப்பு பணியாளர்களின் முயற்சியின் பயனாக இலக்கை தாண்டி ரூ.13 கோடியே 75 லட்சத்திற்கு கடன் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.292 கோடிக்கு கடன் வழங்கி சாதனை appeared first on Dinakaran.

Tags : Nagapattinam District ,Collector ,Janidamvarkees Pride ,Women's Advancement ,Nagapattinam ,District ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் எவ்வளவு...