×

புதியம்புத்தூரில் தேங்கிநிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

ஓட்டப்பிடாரம் : புதியம்புத்தூர் பஜாரில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு நிலவுவதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தமிழகத்தின் குட்டி திருப்பூர் என்ற அடைமொழியுடன் ஆயத்த ஆடைகள் உற்பத்தியில் தனிச்சிறப்புடன் விளங்கி வரும் பகுதி புதியம்புத்தூர் ஆகும். ஆனால் சமீபகாலமாக புதியம்புத்தூர் சந்தை பஜார் முழுவதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி அதன் பெருமையை குறைத்து மதிப்பிடச் செய்யும் விதமாக தூத்துக்குடி செல்லும் மெயின் ரோட்டில் இருந்து அங்குள்ள சந்தை பஜாருக்கு செல்லும் தெருவுக்கான ரோடு உள்ளது. இந்த ரோடு வழியாக தனியார் வாரச் சந்தை, பள்ளிகள், ஆலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்று திரும்புகின்றனர்.

இந்த சந்தை பஜாருக்கு மெயின் ரோட்டில் இருந்து தெற்காக செல்லக்கூடிய பாலத்தின் கீழ் வழியாகத்தான் மேல் பகுதியில் இருந்து வரக்கூடிய கழிவுநீர் செல்லும் பிரதான கால்வாய் அமைந்துள்ளது. மேலும் பல்வேறு ஓட்டல்கள், கடைகளில் இருந்து வரும் கழிவுநீரும் இந்த கால்வாயில்தான் செல்கிறது. இந்த பிரதான கால்வாயின் பாலத்தின் அடியில் கடந்த 30 தினங்களுக்கும் மேலாக அதன் அடியில் உடைப்பு, பழுதுகளால் அதில் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் சீராக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதில் செல்லக்கூடிய கழிவுநீர் வெள்ளமாக சந்தை பஜார் பகுதி பகுதி முழுவதும் தெருக்களில் தேங்கி நிற்கிறது, இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அதனால் கொசு தொல்லையும் மிக அதிகமாக உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இவ்வழியாக தினமும் செல்லக்கூடிய பள்ளி குழந்தைகள், பெண்கள் முதல் முதியவர்கள் வரையிலும் மூக்கை பிடித்துக் கொண்டு ஆடைகளை உயர்த்தி பிடித்தப்படி அதில் காலை ஊன்றி மிகவும் அருவருப்புடன் கடந்து வருகின்றனர்.இதுபற்றி இங்குள்ள வியாபாரிகள் முதல் பொதுமக்கள் வரை பலரும் சம்பந்தப்பட்ட தேங்கியுள்ள நீரை போட்டோக்கள் எடுத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட அனைவரிடமும் புகார் தெரிவித்தனர்.

ஆனாலும் அதனை சரி செய்வதில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் அதிகாரிகள் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சந்தை பஜாருக்கு வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் சுற்றுக் கிராமங்களை சேர்ந்த சிறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரது மத்தியிலும் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே டெங்கு மலேரியா உள்ளிட்ட கடும் நோய்கள் பரவும் முன் இந்தப் பாலத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்திடவும் சீராக கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் உடனே எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களும், வியாபாரிகளும் எதிர்பார்க்கின்றனர்.

The post புதியம்புத்தூரில் தேங்கிநிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Tags : New Bathur ,New Ambatore Bazaar ,New Thuru ,
× RELATED புதியம்புத்தூரில் பிரபல நிதி...