×

ஒண்டிப்புதூர் மேம்பாலம் கட்ட வலியுறுத்தி ரயில் மறியலுக்கு முயன்ற 296 பேர் கைது

கோவை : கோவை ஒண்டிப்புதூரில் மேம்பாலம் கட்ட வலியுறுத்தி ரயில் மறியலுக்கு முயன்ற 296 பேர் கைது செய்யப்பட்டனர்.கோவை ஒண்டிப்புதூர் ராமச்சந்திர நாயுடு வீதியில் ரயில் பாதை உள்ளது. இங்கே பாதை கடக்கும் இடத்தில் ரயில் கிராசிங் கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்திற்காக கடந்த 2011ம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஜூன் மாதம் இங்கே மேம்பாலம் கட்டப்படாது என அறிவிக்கப்பட்டது.

இந்த ரயில்வே கேட் மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துவிட்டதாக தெரிகிறது. இந்த பகுதியை சேர்ந்த மக்கள் சென்று வர மாற்று பாதையும் அமைத்து கொடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்தப் பகுதியில் உடனடியாக மேம்பாலம் அமைக்கக்கோரியும் சக்தி நகர், சிவலிங்கபுரம், காமாட்சி நகர், சூர்யா நகர் உட்பட 10க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

அதன்படி நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரயில்வே கேட் முன்பு திரண்டனர். மக்கள் குவிந்ததால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த பகுதி பொதுமக்கள் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட தண்டவாளத்திற்கு செல்ல முயன்றனர். அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி 296 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் எங்கள் பகுதியில் இருந்து திருச்சி ரோட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் 1 கிலோ மீட்டர் தூரம் செல்லவேண்டும்.

ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள மாற்று பாதை வழியாக செல்லும்போது 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் உடனடியாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும். பல ஆண்டு காத்திருந்த எங்களை மேம்பாலம் கட்டி தர தயாராக இருக்கிறோம் என சொல்லி ஏமாற்றி விட்டனர்’’ என்றனர்.

The post ஒண்டிப்புதூர் மேம்பாலம் கட்ட வலியுறுத்தி ரயில் மறியலுக்கு முயன்ற 296 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ondipudur ,Coimbatore ,Ondiputhur, Coimbatore ,Ondiputhur ,Dinakaran ,
× RELATED போதையில் லாரி ஓட்டிய டிரைவர் அதிரடி கைது