×

நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது

*கோரிக்கைகளை விளக்கி ஊர்வலம்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் நேற்று ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 96 மாத டி.ஏ. உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு, மருத்துவ படி உயர்வை வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் பண பலன்களை வழங்கிட வேண்டும்.

பென்ஷனை அரசே ஏற்று நடத்திட வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி பென்ஷன் வழங்க வேண்டும். 2003 க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டம் அமலாக்க வேண்டும். 2005க்கு பின் மரணமடைந்த தொழிலாளர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும். ஓய்வு பெற்று மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் குடும்ப நலநிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்சங்க நல அமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தலைமை அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் தொடங்கினர்.

குமரி மாவட்ட கிளை சார்பில், நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள மண்டல போக்குவரத்து கழக தலைமையகம் முன் நேற்று காலை 11 மணிக்கு காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து அவர்கள் நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள மண்டல தலைமையக அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். இந்த போராட்டத்தையொட்டி ஏராளமான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

போராட்டத்துக்கு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட தலைவர் லெட்சுமணன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. பெலலார்மின் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், மற்றும் நிர்வாகிகள் பொன் சோபனராஜ், பால்ராஜ், மரிய வின்சென்ட், ராமச்சந்திரன், தங்கமோகனன், எஸ். அந்தோணி உள்பட பலர் பங்கேற்று பேசினர்.

போராட்டத்தையொட்டி போக்குவரத்து மாவட்ட தலைமையக அலுவலக நுழைவு வாயில் மூடப்பட்டு இருந்தது. உள்ளே வர வேண்டிய வாகனங்கள் அனைத்தும் மாற்று கேட் வழியாக அனுதிக்கப்பட்டன. இரவிலும் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். முன்னதாக போராட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முன்னாள் எம்.பி. பெல்லார்மின், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Nagarkovic ,Nagarko ,Nagarkovil ,
× RELATED நாகர்கோவில் மாநகரில் இன்று முதல் 30 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்