×

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் கொல்லப்பட்ட விவகாரம்… ஆதாரங்கள் இருந்தால் ஒத்துழைக்க தயார் : இந்தியா அறிவிப்பு

வாஷிங்டன் : கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே அடிப்படை ஆதாரங்கள் இருந்தால் அதனை விசாரிக்க தயாராக உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி வரும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் அதிகளவில் குடியேறி வருகின்றனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் டைகர் போர்ஸ் என்ற அமைப்பின் தலைவரும் இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு இந்தியாவே காரணம் என்று அண்மையில் கனடா பிரதமர் முன்வைத்த குற்றச்சாட்டை ஒன்றிய அரசு மறுத்தது. இதனால் இரு நாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வந்த அமெரிக்கா, தற்போது திடீரென்று இந்திய அரசு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதனிடையே ஐநா பொது அவையில் பேசிய ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், அரசியல் வசதிக்கு ஏற்ப தீவிரவாதத்தை கையாள்வது உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது என்று கனடாவை மறைமுகமாக சாடினார்.

மேலும் தனியார் அமைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், கனடாவின் குற்றச்சாட்டு தொடர்பாக அடிப்படை ஆதாரங்களை யாரேனும் வழங்கினால் அது குறித்து விசாரிக்க இந்தியா தயாராக உள்ளதாக தெரிவித்தார். கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள் தாக்கப்பட்டது, தூதரக அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே என்று குறிப்பிட்ட அவர், கனடாவில் உள்ள தீவிரவாத தலைவர்களை நாடு கடத்தும் கோரிக்கை நிலுவையில் உள்ளதையும் சுட்டிக் காட்டினார். மேலும் அவர் தனது ஐ.நா.உரையில் சர்வதேச அரசியலில் ஆதிக்கம் செலுத்த முயலும் சில நாடுகளை மறைமுகமாக சாடினார். உலக விதிகளின் அடிப்படையில் இயங்குவதை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர், இன்றும் சில நாடுகள் விதிமுறைகளை வரையறுக்க முயல்வதாக குறிப்பிட்டார். அது காலவரையின்றி தொடராது என்றும் அவர் தெரிவித்தார்.

The post கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் கொல்லப்பட்ட விவகாரம்… ஆதாரங்கள் இருந்தால் ஒத்துழைக்க தயார் : இந்தியா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kalystan ,Canada ,India ,Washington ,Galistan ,Khalistan ,
× RELATED கனடா சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த தம்பதி, பேரன் பலி