புதுக்கோட்டை, செப்.27: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தின் மேற்கூரை மீண்டும் இடிந்து விழுந்ததில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது தாயார் படுகாயமடைந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகளும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தின் கட்டிடங்கள் சிதலமடைந்து மேற்கூரைகள் கடந்த சில மாதங்களாக இடிந்து விழுந்து. இந்நிலையில் நேற்று அதிகாலை புதிய பேருந்து நிலையத்தில் காரைக்குடி பேருந்து நிற்கும் இடத்தில் உள்ள கடையின் முன்பு மேற்கூரை சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்தது.
அங்கு நின்று கொண்டிருந்த தஞ்சாவூர் மாவட்டம் செருவாவிடுதி பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது தாயார் வெள்ளையம்மாள் ஆகியோர் மீது சிமென்ட் காரை விழுந்ததில் படுகாயமடைந்தனர். இதனை அடுத்து காயமடைந்த இருவரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மேற்கூரை பெயர்ந்து விழுந்த பகுதியை எம்எல்ஏ முத்துராஜா, நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பெயர்ந்து விழுந்த மேற்கூரைகள் உடனடியாக நகராட்சி பணியாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து எம்எல்ஏ முத்துராஜா புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டார்.
இந்நிலையில், புதிய பேருந்து நிலையம் இடிந்து விழுந்ததையடுத்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை இடிக்க உள்ளதால் கடைகளை காலி செய்ய வேண்டும். இல்லை என்றால் நகராட்சி நிர்வாகம் காலி செய்யும் என்று ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.
The post புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது: முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் காயம் appeared first on Dinakaran.