×

தாந்தோணிமலை பெருமாள் கோயிலில் தேரோட்டம்

கரூர், செப். 27: கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. கரூர், தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற திருத்தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து ‘கோவிந்தா கோவிந்தா’ என உற்சாகமாக கோஷமிட்டபடி இழுத்தனர். தமிழ் மாதங்கள் 12ல் 6வது மாதமாக புரட்டாசி மாதம் வருகிறது. இந்த மாதத்திற்கு என தனித்துவமான மகிமைகளும், சிறப்புகளும் உண்டு. புரட்டாசி மாதத்தை தெய்வீக மாதமாக கூறப்படுகிறது. புரட்டாசி மாதம் காக்கும் கடவுள் மகா விஷ்ணுவுக்கு ஏற்றது. தமிழகத்தின் தென் திருப்பதி என தாந்தோணிமலையில் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுதும் பல்வேறு சிறப்புகள் கொண்டதாக உள்ளது என்பதால் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகள் மற்றும் திருவோண நட்சத்திர நாளில் நடைபெறும் திருத்தேரோட்டம் போன்றவை முக்கியத்துவமானதாகும்.

தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் ஆகம முறைப்படி நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் புரட்டாசி திருவோண திருத்தேர், மாசி மாதத்தில் வரும் மாசி மக திருத்தேர் போன்றவை இந்த கோயிலில் மிக முக்கிய விழாக்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி பெருந்திருவிழா மற்றும் மாசி மகத் தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டுக்கான புரட்டாசி பெருந்திருவிழாவின் திருக்கொடியேற்றம் கடந்த 18ம்தேதி, நடைபெற்றது. தினமும் பல்லக்கு நிகழ்வுகளை தொடர்ந்து, செப்டம்பர் 24ம்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று காலை 8.30 மணியளவில் கோயில் முன்பு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம் பிடித்து ;கோவிந்தா கோவிந்தா: என்ற கோஷங்களுடன் தேரை இழுத்துச் சென்றனர். திருத்தேர் தாந்தோணிமலை கோயில் மலையை சுற்றி வலம் வந்து திரும்பவும் கோயில் முன்பு தேர் நிலையை அடைந்தது. இந்த நிகழ்வில், எம்எல்ஏ இளங்கோ, மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், கோயில் செயல் அலுவலர் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். தேரோட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தாந்தோணிமலை போலீசார் செய்திருந்தனர்.

The post தாந்தோணிமலை பெருமாள் கோயிலில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Chariot ,Thanthonimalai Perumal Temple ,Karur ,Kalyana ,Venkataramana ,Swamy ,Thanthonimalai ,Kalyana Venkataramana Swami ,
× RELATED கோனியம்மன் கோயிலில் நாளை தேரோட்டம்