×

தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கு ஆசிரியர் பட்டய பயிற்சியில் பதிய இணைய இணைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கு ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் பதிவு செய்வதற்காக இணைய இணைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்ப் பரப்புரை கழக திட்டத்தின் கீழ், தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் பதிவு செய்வதற்கான இணைய இணைப்பு மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இணையதளத்தினையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்ப் பரப்புரை கழகத் திட்டத்தின் கீழ், தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் பதிவு செய்வதற்கான இணைய இணைப்பு தொடங்கி வைத்தல்:
அயலக மாணவர்களின் தமிழ்க்கற்றல் கற்பித்தலுக்காக தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை செப்டம்பர் 2022ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் பணிகளைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் செயல்படுத்தி வருகிறது. இதில் திறன்கள் அடிப்படையிலான பாடப்புத்தகங்கள், கற்றல் துணைக்கருவிகள், கட்டணமில்லா இணையவழி வகுப்புகள் முதலான பல வசதிகள் 34 நாடுகளிலும் 16 இந்திய மாநிலங்களிலும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் 160 தொடர்பு மையங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ் பரப்புரைக்கழகத்தின் மற்றொரு முக்கியமான முன்னெடுப்பாகத் தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான இணையவழி ஓராண்டு ஆசிரியர் பட்டயப்பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டது. இந்தப் பட்டயப்பயிற்சியைத் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்க கடந்த ஜன.12ம் தேதி அன்று நடைபெற்ற அயலகத் தமிழர் தினவிழாவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்தப் பட்டயப்பயிற்சியைத் தொடங்குவதற்கான பணிகள் முடிவடைந்து, இந்தக் கல்வித்திட்டத்தில் பதிவு செய்வதற்கான http://tva.reg.payil.app/ என்ற இணைய இணைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இணையதளத்தினை தொடங்கி வைத்தல்:
தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு வழித்தட அனுமதி வழங்குவதற்கான ஒரு இணையதளத்தை எல்காட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. எல்காட் நிறுவனத்திற்கும், அரசுத் துறைகளுக்கும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள பிற பங்குதாரர்களுக்கும் இடையே வெளிப்படையான, விரைவான மற்றும் திறமையான முறையில் சேவைகளை வழங்குவதற்கு தானியங்கு நெறிப்படுத்தப்பட்ட தொடர்புகளை வழங்கும் ஒருங்கிணைந்த இணையதளம் https://erp.elcot.inஐ முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைச் செயலாளர் குமரகுருபரன், தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண்மை இயக்குநர் அனீஷ் சேகர், தமிழ்நாடு மின்னணு நிறுவன செயல் இயக்குநர் அருண் ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கு ஆசிரியர் பட்டய பயிற்சியில் பதிய இணைய இணைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : CM G.K. Stalin ,Chennai ,Chief Minister of Tamil ,G.K. Stalin ,
× RELATED அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற...