×

திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிய வகுப்பறை கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை நேயப்பள்ளி உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் புதிய பள்ளி கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள 26 பள்ளிகளுக்கான புதிய வகுப்பறை கட்டிடங்களையும் நேற்று முதல்வர் திறந்து வைத்தார். பழவேற்காடு அடுத்த ஜமீலாபாத் கிராமத்தில் நடைபெற்ற பள்ளி வகுப்பறை கட்டிட திறப்பு விழாவில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் கலந்து கொண்டார். பின்னர் கட்டிடங்களை அவர் பார்வையிட்டார். இதனையடுத்து ஜமீலாபாத் மற்றும் தோணிரேவு பள்ளிகளின் புதிய வகுப்பறை கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.

அப்போது பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே எம்எல்ஏ பேசும்போது, ஜமீலாபாத் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு பள்ளியின் தரம் உயர்த்தப்படும் என்றார். இந்த புதிய கட்டிடங்களில் 21ம் நூற்றாண்டுக்கான கற்றல் கருவிகளைக் கொண்டு புதுமை முறையில் அமைக்கப்பட்ட கதா மேஜிக் லேப்பை துரைசந்திரசேகர் எம்எல்ஏ, மீஞ்சூர் ஒன்றியக் குழுப் பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமலதா ஆகியோர் குழந்தைகளுடன் இணைந்து குத்து விளக்கேற்றி திறந்து வைத்து விழாவினை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், சந்திரசேகர், மாவட்ட கவுன்சிலர் தேசராணி, தேசப்பன், சமூக ஆர்வலர் முஹம்மது அலவி, ஒன்றிய கவுன்சிலர்கள் தமின்சா, செல்வழகி எர்ணாவூரான், ஊராட்சி மன்ற தலைவர்கள் கோட்டைக்குப்பம் சம்பத், லைட் ஹவுஸ் கஜேந்திரன், ஒப்பந்ததாரர்கள் அண்ணாமலை சேரி ஆறுமுகம், தோணிரேவு ஏசுராஜன் மற்றும் ஜமீலாபாத், தோணிரேவு கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். திருமழிசை: பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமழிசை பேரூராட்சியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.16 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகள் கட்டிடத்தை தலைமை செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து புதிய வகுப்பறை கட்டிடத்தில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி மாணவர்களின் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் ஒன்றியக் குழுத்தலைவர் பூவை எம்.ஜெயக்குமார், திருமழிசை திமுக பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி, பேரூராட்சித் தலைவர் உ.வடிவேலு, ஒன்றிய குழு துணைத்தலைவர் பரமேஸ்வரி கந்தன், பேரூராட்சி துணைத் தலைவர் ஜெ.மகாதேவன், ஒன்றிய ஆணையர் ஸ்டாலின், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேஷ், கவுன்சிலர் கஸ்தூரி அருள், பேரூர் திமுக நிர்வாகிகள் செல்வம், இளங்கோ, எழிலரசன், அருள், பன்னீர்செல்வம், கங்காதரன், பாஸ்கரன், மு.சுரேந்தர், பார்த்திபன், அன்பு, சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உமாமகேஸ்வரி சங்கர், கன்னியப்பன், டில்லிகுமார், ஊராட்சி தலைவர் திவ்யா பொன் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் பாலா நன்றி கூறினார். பொதட்டூர்பேட்டை: பள்ளிப்பட்டு ஒன்றியம் பொதட்டூர்பேட்டை நடுத்தெரு, மேல் பொதட்டூர், பள்ளிப்பட்டு முனிரெட்டி கண்டிகை ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு, குழந்தை நேசம் திட்டத்தின் கீழ் தலா ரூ.28 லட்சம் வீதம், 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதனை நேற்று தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதற்காக பொதட்டூர்பேட்டை நடுத்தெரு முன்மாதிரிப் பள்ளி, மேல் பொதட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் குமரகுருபரன், சண்முகராஜ், பொதட்டூர்பேட்டை பேரூர் திமுக செயலாளர் பாபு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் இளங்கோ, புஷ்பா உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

ஏனம்பாக்கம்: பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் ஏனம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.  இந்நிலையில், தொடக்கப்பள்ளியின் பழைய கட்டிடத்தை அகற்றி விட்டு ரூ.28 லட்சத்தில் புதிதாக பள்ளி கட்டிடமும், அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தில் நிதி ரூ.7.43 லட்சம் செலவில் சமையல் கூடமும் கட்டி முடிக்கப்பட்டது. கட்டிடம் கட்டி முடித்து 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் திறக்கப்படாமல் இருந்தது. எனவே பள்ளியை விரைவில் திறந்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என “தினகரன்” நாளிதழில் கடந்த மாதம் 14ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில், நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் இந்த பள்ளிக் கட்டிடம் மற்றும் சமையல் கூடத்தை திறந்து வைத்தார்.

இதில் எல்லாபுரம் பிடிஓக்கள் நடராஜ், சத்தியமூர்த்தி, ஊராட்சிமன்றத் தலைவர் பாபு, தலைமையாசிரியர் மதிவதனி, ஒன்றிய கவுன்சிலர் கல்பனா வெங்கடேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் கன்னிகைப்பேர், பெத்தநாயகன் பேட்டை, அத்தங்கிகாவனூர் ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளி கட்டிடங்களையும் காணொலி மூலம் முதல்வரால் திறக்கப்பட்டன. பூவலை ஊராட்சி: கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 2 வகுப்பறை கட்டிடங்களே இருந்தது. அதில் ஒரு கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்தது.

இதை, இடித்து அங்கு தமிழக அரசின் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 வகுப்பறை கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்ததை தொடர்ந்து, பள்ளியை மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் நிகழ்வு பூவலை அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்விற்கு, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் தலைமை தாங்கி பள்ளியை மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.லிடியா சந்திரலீலா அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்வில், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, மணிசேகர், பொறியாளர் ஐசேக், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் மணிபாலன், ஒன்றியக்குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர் ரோஜா ரமேஷ்குமார், மாவட்ட பொருளாளர் ரமேஷ், ஒன்றிய நிர்வாகி மஸ்தான், கிளைக் செயலாளர் இப்ராஹிம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சீனிவாசன், லாரன்ஸ், மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சோழவரம் ஒன்றியம்: சோழவரம் ஒன்றியம் அலமாதி அரசு நடுநிலைப் பள்ளியில் கூடுதலாக 3 வகுப்பறை கட்டிடங்களும், ஆத்தூர், புதிய எருமை வெட்டிபாளையம், நல்லூர், சோத்து பெரும்பேடு ஆகிய 4 ஊராட்சிகளிலும் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் கூடுதலாக 2 வகுப்பறை கட்டிடங்களும் நேற்று திறக்கப்பட்டன. அலமாதியில் நடைபெற்ற திறப்பு விழாவில் மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டார்.

The post திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிய வகுப்பறை கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Chief Minister ,M.K.Stalin ,Thiruvallur ,M.K.Stal ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...