×

திருமணமான 4 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: சாவில் சந்தேகம் இருப்பதாக சாலைமறியல், ஆர்டிஓ விசாரணை

திருவள்ளூர்: திருமணமான 4 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் எம்.கே.பி.நகரைச் சேர்ந்த திருமலைராஜ் என்பவரின் மகள் ஜீவிதா (22). இவருக்கும் திருவள்ளூர் அடுத்த திருவூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் கார்த்திக் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கார்த்திக் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் அவர் வேலைக்குச் சென்றுள்ளார். வேலை முடிந்து இரவு 7 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவு உள்பக்கம் தாழிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திக், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டுக்குள் ஜீவிதா மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அவர் மேலும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஜீவிதாவை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஜீவிதா ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

மகள் ஜீவிதா இறந்தது குதித்து தகவல் அறிந்து வந்த அவரது தந்தை திருமலைராஜ் செவ்வாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் எனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறுவதால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 4 மாதங்களில் ஜீவிதா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜீவிதாவின் சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி அவரது உறவினர்கள் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post திருமணமான 4 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: சாவில் சந்தேகம் இருப்பதாக சாலைமறியல், ஆர்டிஓ விசாரணை appeared first on Dinakaran.

Tags : Roadblock, RTO ,
× RELATED கனமழை, ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு சதுரகிரி செல்ல 4 நாட்களுக்கு தடை