
ஆவடி: ஆசிய அளவிலான ரக்பி விளையாட்டுப் போட்டியில் ஆவடி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இந்திய நாட்டிற்காக தைவான் நாட்டிற்கு சென்று விளையாட்டு போட்டியில் கலந்து கொள்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காமராஜர் நகர் பகுதியில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 2,400 மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு 70 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவிகள் பலர் படிப்பு மட்டுமின்றி விளையாட்டுகளிலும் சாதித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி அக்சயா மற்றும் முன்னாள் மாணவி திவ்யா இருவரும் 2 முறை தேசிய அளவிலான ரக்பி போட்டியில் குழு பிரிவில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளார். 3 முறை மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். ஆவடி பகுதியைச் சேர்ந்த அக்சயாவின் தந்தை சுரேஷ் கூலி தொழிலாளி. அதேபோல் திவ்யா வண்டலூர் பகுதியில் உள்ள அரசு உடற்பயிற்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை வெங்கடேசன் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ரக்பி விளையாட்டில் 14 வயதிலிருந்து ஆர்வம் உள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ரக்பி விளையாட்டு போட்டியில் அக்சயா, திவ்யா இருவரும் சென்னை மாவட்ட வீரர்களுடன் விளையாடி தங்கப் பதக்கத்தை வென்றனர்.
கடந்த 2022ம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற போட்டியிலும் இவர்கள் இருவரும் தங்கப் பதக்கத்தை வென்றனர். இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ரக்பி விளையாட்டு போட்டியில் இருவரும் செங்கல்பட்டு மாவட்ட வீரர்களுடன் விளையாடி தங்கப் பதக்கத்தை வென்றனர். இதேபோல், இந்த ஆண்டு தேசிய அளவிலான ரக்பி விளையாட்டுப் போட்டி புனேவில் நடைபெற்றது. அதில் 6வது இடம் பெற்றனர்.
இந்த வாரம் நடைபெற உள்ள ஆசிய அளவிலான 18 வயதுக்கு உட்பட்ட ரக்பி விளையாட்டில் தைவான் நாட்டிற்குச் சென்று வெற்றிகளை குவிக்க தயார் நிலையில் உள்ளனர். இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தமிழ்நாடு ரக்பி கால்பந்து யூனியன் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் ரக்பி விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இது போன்ற பயிற்சியாளர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டனர்.
The post தைவான் நாட்டில் நடைபெறும் ஆசிய ரக்பி விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் அரசுப்பள்ளி மாணவிகள் appeared first on Dinakaran.