×

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்ககம் சார்பாக மாவட்ட அளவிலான பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம்: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

திருவள்ளூர்: தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்ககம் சார்பாக நடந்த மாவட்ட அளவிலான பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து ஆலோசனைகளை வழங்கினார். தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்ககம் சார்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலநிலை மாற்றத்தில் பருவநிலை மாற்றம் குறித்து மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட வன அலுவலர் ரவி மீனா அனைவரையும் வரவேற்றார். இந்த கருத்தரங்கை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து, தலைமையுரையாற்றி ஆலோசனைகள் வழங்கினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:- காலநிலை மாற்ற இயக்ககத்தை அமைத்துள்ள ஒரே மாநிலம் நமது தமிழ்நாடு மட்டும்தான் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தக் காலநிலை மாற்றம் என்பது நாம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற ஒரு முக்கியமான பிரச்னை என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான், எந்தெந்த மாவட்டங்களில் எந்த மாதிரியான பிரச்னைகள் உள்ளது, எந்த மாதிரியான சவால்கள் உள்ளது, அதற்கான தீர்வுகள் என்ன என்பதை கண்டறிவதற்காகவும், அந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு இத்தகவல்களை தெரிவித்து பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும்தான் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.

பல்வேறு துறைகளில் இருந்து அதிகாரிகள் இங்கு வந்துள்ளீர்கள். காலநிலை மாற்றத்தால் நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் எந்த விதமான பிரச்சினைகளும் வரலாம். அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சிஓபி 27 ஆனது, நாடு அளவிலான கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும், மானுடவியல் காலநிலை மாற்றத்தின் பேரழிவு விளைவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய வழிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கும், பங்குபெறும் நாடுகளிடையே உறுதியான உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, இந்தியா 2070ல் இந்த இலக்கை அடையும் என்று தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சரும் முன்னதாகவே இந்த இலக்கினை அடைய தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளில் பசுமை மயமாக்கலை 23 சதவீதத்திலிருந்து 33 சதவீதத்திற்கு உயர்த்துவதற்கு வனத்துறை சார்பாகவும், பல்வேறு துறைகள் சார்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றம் என்பது ஒரு ரியாலிட்டி. அதில் யாருக்கு அதிக பாதிப்பு வரும் என்றால் விளிம்பு நிலையில் உள்ள மக்கள், ஏழை மக்கள், குறிப்பாக பெண்களுக்குத்தான். இப்படிப்பட்ட பாதிப்புகள் வரும் என்பதை கண்டறிந்து அந்த பாதிப்புகளை எப்படி கையாளுவது என்பதையும் கண்டறிந்து அரசு அதற்காகவே திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற இயக்ககம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்திலேயே 2வது மாவட்டமாக நமது திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து துறை அலுவலர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, காலநிலை மாற்றத்தில் பருவநிலை மாற்றம் குறித்து நடைபெற்ற மாவட்ட அளவிலான இந்த கருத்தரங்கத்தில் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரையிடப்பட்ட காணொலியை கலெக்டர் பார்வையிட்டார்.

இக்கருத்தரங்கில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க உதவி இயக்குநர் மணிஷ்மீனா, தமிழ்நாடு ஈரநிலை இயக்க உதவி இயக்குநர் தக்சயோகேஷ்குமார் கார்க், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட் வத்ஸ், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் அலுவலர் (கும்மிடிப்பூண்டி) லிவிங்ஸ்டன், மாவட்ட பசுமைத் தோழர் சுருதி மற்றும் வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்ககம் சார்பாக மாவட்ட அளவிலான பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம்: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : District Level Climate Change Seminar ,Tamil Nadu Climate Change Directorate ,Thiruvallur ,change ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்...