×

பொய் வழக்கு போடுவேன் என போலீசார் மிரட்டுவதாக வாட்ஸ்அப்பில் வீடியோ பதிவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை: மாங்காடு அருகே பரபரப்பு

குன்றத்தூர்: மாங்காடு அடுத்த பரணிபுத்தூர், சீனிவாசபுரம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரூபன் (40). அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு ஆதிலட்சுமி, லீலாவதி என 2 மனைவிகளும், 4 பிள்ளைகளும் உள்ளனர். 2 மனைவிகளையும் அதே பகுதியில் தனித்தனியாக வீடு எடுத்து தங்க வைத்து, குடித்தனம் நடத்தி வந்தார். ரூபன் மீது போரூர் காவல் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு அம்பத்தூரை சேர்ந்த ஒருவரிடமிருந்து, 2 ஷேர் ஆட்டோக்களை விலைக்கு வாங்கிய ரூபன், முதற்கட்டமாக ரூ.1.50 லட்சம் கொடுத்துள்ளார். மீதி பணத்தை பிறகு தருவதாக கூறியுள்ளார். ஆனால், 3 ஆண்டுகளாகியும் பணத்தை தரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஆட்டோ உரிமையாளர் கடந்த சில தினங்களுக்கு முன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அம்பத்தூர் போலீசார், ரூபனை அழைத்தனர். கடந்த வாரம் காவல் நிலையம் சென்ற ரூபன், பணத்திற்கு பதிலாக தான் வாங்கிய ஒரு ஆட்டோவை திருப்பிக் கொடுத்து விட்டு, மீதி பணத்தை பிறகு தருவதாக கூறி வந்துள்ளார். மேலும், 24ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு ஆஜராவேன் என்று எழுதிக் கொடுத்து விட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இவர் தனது 2வது மனைவி லீலாவதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முன்னதாக, அவர், செல்போனில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘‘அம்பத்தூர் காவல் நிலைய எஸ்ஐ, கட்டப்பஞ்சாயத்து செய்து, அடிக்கடி போன் செய்து தொல்லை கொடுக்கிறார். பொய் வழக்கு பதிவேன் என்று மிரட்டுகிறார். அதனால், மன உளைச்சலில் நான் இந்த முடிவை எடுக்கிறேன். என்னுடைய தற்கொலைக்கு காரணம் அம்பத்தூர் காவல் நிலைய எஸ்ஐ சரவணன் தான்,’’ என்று பதிவிட்டு, அதனை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.

தகவலறிந்து வந்த மாங்காடு போலீசார், ரூபன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ரூபன் தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பாக ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது. மேலும், ரூபன் தற்கொலைக்கு காரணமான எஸ்ஐ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்களும், மனைவியும் புகார் தெரிவித்துள்ளனர்.

The post பொய் வழக்கு போடுவேன் என போலீசார் மிரட்டுவதாக வாட்ஸ்அப்பில் வீடியோ பதிவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை: மாங்காடு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Mangadu ,Kuntarathur ,Ruben ,Mariamman Temple Street ,Paraniputtur, Sinivasapuram ,
× RELATED மாங்காடு அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது..!!