×

போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் வீட்டு அருகே முகத்தை சிதைத்து ரவுடி வெட்டி படுகொலை: பட்டாகத்தி, நாட்டு வெடிகுண்டு பறிமுதல்


கூடுவாஞ்சேரி: ஆதனூரில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டு அருகே தலைமறைவாக இருந்த ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், ஈஸ்வரன் நகர், 10வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (50). லாரி டிரைவர். இவருக்கு மனைவி கிருஷ்ணவேணி (48), மகள் சர்மிளா (29), மகன் மோகன்ராஜ் (25) ஆகியோர் உள்ளனர். இதில், ரமேஷின் மனைவி கிருஷ்ணவேணி தனது கணவரை பிரிந்து கடந்த 2013ம் ஆண்டு முதல் மலேசியாவில் தங்கி வேலை செய்து வருகிறார். ரமேஷ், அவரது மகள் சர்மிளாவும் பம்மலில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

இதில், மோகன்ராஜ் மீது பம்மல் அடுத்த சங்கர் நகர் மற்றும் குன்றத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் இருந்து குற்றப்பிரிவு போலீசார் ரமேஷின் வீட்டிற்கு அடிக்கடி வந்து மோகன்ராஜை அழைத்து சென்றுள்ளனர்.  பின்னர், அவர் சிறைக்கு சென்றதாகவும், இதனை அடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தன்னை அடிக்கடி போலீசார் தேடி வருவதால் கடந்த 2018ம் ஆண்டு தனது அம்மா தங்கி வேலை பார்க்கும் மலேசியாவுக்கு சென்று வேலை பார்த்துவிட்டு மீண்டும், கடந்த 2021ம் ஆண்டு வீடு திரும்பி உள்ளார். பின்னர், அவரை போலீசார் மீண்டும் தேடி வருவதை கண்டதும் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட டிடிசி நகரில் மீன் வியாபாரிகள் குடியிருந்த வாடகை வீட்டில் தங்கி தலைமறைவாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் கன மழை பெய்த சமயத்தை பயன்படுத்தி வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் மோகன்ராஜியின் முகத்தை சிதைத்தபடி சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பித்து ஓடியுள்ளது. நேற்று காலை அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதைக் கண்டதும் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து, தகவல் அறிந்ததும் மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டில் ரத்தம் உறைந்தபடி மோகன்ராஜின் சடலத்தை கைப்பற்றினர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது மோகன்ராஜ் தனது இடுப்பில் சொருகி வைத்திருந்த பட்டாக்கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து. அவருடன் தங்கி இருந்த நண்பர்கள் போதையில் ஏற்பட்ட தகராறில் வெட்டி கொலை செய்ததார்களா? அல்லது பழிக்கு பழி ரவுடி கும்பல் வெட்டி படுகொலை செய்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மணிமங்கலம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆதனூரில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டு அருகே நடந்த படுகொலை சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

*போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டும் கொலை
சமீப காலமாக ஆதனூர் ஊராட்சியில் உள்ள அரசியல் பிரமுகர்களிடம் பணம் கேட்டு மிரட்டி பிரபல ரவுடி கும்பல் ஒன்று, மாடம்பாக்கம் ஊராட்சி தலைவர் ஸ்கெட்ச் வெங்கடேசனை கடந்த ஆண்டு கொலை செய்தது. இதனையடுத்து திமுக பிரமுகர் சக்கரபாணியை கடந்த ஜூலை மாதம் மாமுல் தர அறுத்த ரவுடி கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது. இதனால், ஆத்திரமடைந்த போலீசார் பிரபல ரவுடிகளான சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இரண்டு பேரையும் ஊரப்பாக்கம் அருகே உள்ள அருங்கால்-காட்டூர் வனப்பகுதியில் வைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி என்கவுண்டர் செய்தனர். இதனால் ஒரு மாதமாக பொதுமக்கள் நிம்மதியாக இருந்தனர்.

ஆனால், அதே ரவுடி கும்பலை சேர்ந்த மாடம்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி சதாம்உசேன் தலைமையிலான ரவுடி கும்பல் ஆதனூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்அமுதனை கொலை செய்வதற்காக கடந்த 8ம் தேதி ஆதனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பைக்கில் நோட்டமிட்டபடி வலம் வந்தது. இதுகுறித்த, சிசிடிவி காட்சி வைரலானது. இதனை அடுத்து சதாம்உசேனை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர். பின்னர், ஊராட்சி மன்ற தலைவரின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு பாக்ஸ்ர்கள் உட்பட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டும் பம்மலை சேர்ந்த ரவுடி மோகன்ராஜை மர்ம கும்பல், ஒன்று கொலை செய்தது அப்பகுதியில் நேற்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

*பாக்கெட்டில் பாம் கைப்பற்றிய போலீசார்
அக்கம், பக்கத்தினர் கூறிய தகவல்களின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை நடத்திய கூடுவாஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் கொலையான வீட்டுக்குள் சென்று தடயங்களை தீவிரமாக சேகரித்தனர். அப்போது, கொலையான மோகன்ராஜ் இடுப்பில் இருந்து முதலில் பட்டாகத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரது பாக்கெட்டில் இருந்து பாம் ஒன்றை கைப்பற்றினர்.

இதில், கொலையான மோகன்ராஜ் வைத்திருந்த பாம் வெடித்ததா? அல்லது போலீசை திசை திருப்புவதற்காக வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் மோகன்ரஜியின் முகத்தில் சரமரியாக வெட்டி முகத்தை சிதைத்துவிட்டு சந்தேகம் வராமல் இருப்பதற்காக மோகன்ராஜியின் முகத்தில் ஒரு வெடிகுண்டை வீசிவிட்டு, மற்றொரு வெடிகுண்டை அவரது பாக்கெட்டில் வைத்து விட்டு தப்பி ஓட்டம் பிடித்ததா என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கொலையாளிகளை பிடித்த பின்னரே முழு விவரம் தெரிய வரும்.

*பெண் கூறிய தகவலால் போலீசார் அதிர்ச்சி
இந்த கொலை தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் அக்கம், பக்கத்தினரிடம் விசாரித்துகொண்டிருந்தனர். அப்போது, கொலை நடந்த வீட்டின் பக்கத்து வீட்டில் குடியிருந்த பெண் ஒருவர். நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் பாம் வெடித்தது போன்று பயங்கரம் சத்தம் கேட்டது. அப்போது, நான் அந்த வீட்டின் அருகே சென்று பார்த்தேன். கரும் புகை மட்டும் வீட்டிலிருந்து வெளியே வந்தது என்றார். இதேபோல், அந்த வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் மற்றொரு நபர் போலீசாரிடம் கூறுகையில், 24ம் தேதி இரவு எனது குழந்தைக்கு வீட்டு மாடியில் பிறந்தநாள் விழா கொண்டாடினோம். அப்போது பயங்கர வெடி சத்தம் கேட்டது.

அப்போது குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்காக சாலையில் நாட்டு வெடிதான் வெடிக்கிறார்கள் என்று இருந்து விட்டோம் என்றார். இதை கேட்ட போலீசார் அதிர்ச்சடைந்தனர். மேலும் 25ம் தேதி இரவு கொலை நடந்திருந்தால் கொலை நடந்த இடத்தில் ரத்தம் படர்ந்தபடி இருந்திருக்கும். ஆனால், கொலையான மோகன்ராஜியின் முகம் கருகிய நிலையிலும், சிதைந்தபடியும், ரத்தம் உறைந்தபடியும் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் கூறிய தகவலால் ரவுடி மோகன்ராஜியின் முகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி சாய்த்து இருக்கலாம் என்று போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

* வாடகை வீட்டில் குடியிருந்த மீன் வியாபாரிகள் மாயம்
மோகன்ராஜ், மீன் வியாபாரிகள் மூலம் பழக்கம் ஏற்பட்டு அவர்களுடன் வாடகை வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி இருந்துள்ளார். இதில் அவர்களுக்குள் நடந்த பிரச்னையால் கடந்த 5 மாதத்துக்கு முன்பு மீன் வியாபாரிகள் வீட்டை விட்டு விட்டு வெளியேறினர். இதனையடுத்து மோகன்ராஜியுடன் ரவுடி கும்பலை சேர்ந்த 4 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இதில், வாடகை வீட்டில் இடம் கொடுத்த மீன் வியாபாரிகளையே அடித்து துரத்தியதால் மோகன் ராஜை மீன் வியாபாரிகள் கொலை செய்தார்களா? அல்லது அவருடன் தங்கி இருந்த ரவுடி கும்பலை சேர்ந்த நண்பர்கள் கொலை செய்தார்களா? அல்லது ஏற்கனவே கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்த மோகன்ராஜை அந்த கும்பல் பழிக்கு பழி வாங்கியதா என்பது குறித்தும், தலைமறைவாக இருக்கும் மீன் வியாபாரிகளை தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் வீட்டு அருகே முகத்தை சிதைத்து ரவுடி வெட்டி படுகொலை: பட்டாகத்தி, நாட்டு வெடிகுண்டு பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : panchayat ,Battagati ,Kuduvancheri ,Adanur ,
× RELATED பூதூர் ஊராட்சியில் அடிபாகத்தில்...