×

குழிப்பாந்தண்டலம் ஊராட்சியில் சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் பீதி: வனத்துறைக்கு கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் ஊராட்சியில் சுற்றித்திரியும் குரங்குகளால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து வருகின்றனர். எனவே, குரங்களை பிடித்து வெகு தூரம் உள்ள காட்டில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் ஊராட்சியில் கம்மாளர் தெரு, நடுத்தெரு, பெரிய தெரு, சிவன் கோயில் தெரு, மாமல்லபுரம் சாலை ஆகிய தெருக்களில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மேலும், மேற்கண்ட இடங்களில் மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ஜோடி குரங்குகள் குட்டிபோட்டு பெருகி விட்டன.

ஆரம்ப காலத்தில், பொதுமக்கள் வீசி எறியும் உணவு பொருட்களை தின்று வளர்ந்த குரங்குகள், தற்போது பல்வேறு இடங்களில் கூட்டமாக சென்று வீடுகளுக்கு வெளியே உள்ள தென்னை, மா, பலா, வாழை, கொய்யா மரங்களில் உள்ள காய்களை கடித்து சேதப்படுத்தின. தற்போது, வீட்டிற்குள் புகுந்து குழந்தைகளுக்கு கொடுக்க வைத்திருக்கும் பால், சமைத்த உணவுகள், அரிசி, தின்பண்டங்கள், காய்கறிகள், பள்ளி மாணவிகளிள் நோட்டு, புத்தகங்கள் என கண்ணில் பட்டதை எல்லாம் கடித்து சேதப்படுத்துகின்றன. இந்நிலையில், வீட்டிற்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை விரட்ட முயன்றால் அவைகள் கூட்டமாக வந்து கடிக்க முற்படுகின்றன.

இதனால், வீட்டில் உள்ள சிறுவர்கள், பெண்கள், முதியோர் அச்சமடைந்துள்ளனர். கடந்த, சில மாதங்களுக்கு முன்பு அங்கு ஒரு வீட்டில் தனியாக இருந்த ஒரு மூதாட்டியை கடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, குழிப்பாந்தண்டலம் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் பல முறை புகார் தெரிவித்தும் இதுநாள் வரை குரங்குகளை பிடிக்க ஆர்வம் காட்டவில்லை என பொதுமக்கள குற்றம் சாட்டுகின்றனர். எனவே, வனத்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு குழந்தைகள், சிறுவர்கள், முதியோரின் நலனை கருத்தில் கொண்டு குரங்குகளை பிடித்து வெகு தூரத்தில் உள்ள காட்டில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதி இளைஞர் ஒருவர் கூறுகையில்,‘குழிப்பாந்தண்டலம் ஊராட்சியில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. பகலில், வீட்டினை திறந்து வைக்க முடியவில்லை. வீட்டிற்குள், புகுந்து உணவுகளை சேதப்படுத்துகின்றது. தோட்டங்களில், உள்ள மரம் செடி, கொடிகளையும் நாசம் செய்கிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு வைத்திருக்கும் பாலை குடித்து விட்டு, பழங்கள், காய்கறிகள், தின்பண்டங்களை தூக்கி சென்று விடுகிறது’ என்றார்.

The post குழிப்பாந்தண்டலம் ஊராட்சியில் சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் பீதி: வனத்துறைக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Puddalam ,Pavement ,
× RELATED மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள்...