×

டெல்லிக்கு படையெடுக்க தயாராகி வரும் தேனி, குக்கர் தரப்பினரின் நடவடிக்கை குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கூட்டணியில் இருந்து பிரிந்தாலும் சந்தோஷப்படாத தாமரை கட்சியின் மக்கள் பிரதிநிதி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தாமரையுடன் கூட்டணி முறித்துக் கொண்டதை அல்வா, முத்து மாவட்டங்களில் இலை கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினாங்க. தென்மாவட்டங்களில் இலை கட்சியினர் இவ்வாறு கொண்டாடி மகிழ்ந்தாலும் ஒருவர் மட்டும் சோகத்தில் மூழ்கி முத்தெடுக்கிறாராம், அல்வா ஊரின் மக்கள் பிரதிநிதி. அவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் இறங்கு முகம்தானாம். அதாவது, 2011ல் ேதர்தலில் வெற்றி பெற்ற போதிலும் இலை கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. தன்னை விட ஜூனியர் எல்லாம் மந்திரியாகி விட்டனர் என இலை கட்சியினருடன் அவ்வப்போது மனசுல இருப்பதை கொட்டி தீர்ப்பாராம். இலை கட்சியில் இருந்து தேசிய கட்சிக்கு தாவிய பிறகு, அவரால் அதிகபட்சம் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக மட்டுமே ஆக முடிந்தது. எனவே இனி நமக்கு மாநில அரசியல் சரிபடாது. மாநில அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டு இனி தேசிய அரசியலில் களமிறங்கி விடலாம் என கணக்கு போட்டார் அல்வா ஊரின் மக்கள் பிரதிநிதி. அதற்காக அல்வா மக்களவை தொகுதியில் களமிறங்க ரகசிய திட்டம் போட்டிருந்தாராம். இந்நிலையில், சமீபத்தில் வந்தே பாரத் ரயில் துவக்க விழாவின்போது கூட பேட்டியளித்த அவர், கூட்டணி தொடர்பாக இலை கட்சியின் 2ம் கட்டத் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்து இறுதி கருத்தல்ல என்று தைரியமாக சொன்னாராம். ஆனால் இலை கட்சி தேசிய கட்சியுடன் கூட்டணி உடைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட தனது கனவு கனவாகவே போகும் போலிருக்கே என்று கவலையில் ஆழ்ந்துள்ளாராம். இப்போதைக்கு கூட்டணி கலகலத்துப் போனதால் மக்கள் பிரதிநிதி பதவி மட்டும் போதும் என்ற முடிவுக்கு நெல்லையின் மக்கள் பிரதிநிதி வந்துள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தாமரை தலைமையுடன் உறவில் இருப்பதை தடுக்க கண்காணிப்பு வளையத்தை யார் தீவிரப்படுத்தி இருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தாமரை கட்சியுடனான கூட்டணியை இலைகட்சி முறித்துக்கொண்டது. ஆனால், மன்னர் மாவட்டத்தை சேர்ந்த மாஜிஅமைச்சர், சில முக்கிய நிர்வாகிகளுக்கு தாமரை கட்சியுடன் கூட்டணி முறிவு பிடிக்கவில்லை. கூட்டணி முறிந்தாலும் தாமரை நிர்வாகிகளுடன் தொடர்பில் இவர்கள் இருந்து வருகிறார்கள். இந்த தகவல் சேலத்துக்காரரின் கவனத்துக்கு போனதாம். கட்சி தலைமை உதறியவர்களுடன் கட்சி நிர்வாகிகளுக்கு என்ன உறவு வேண்டி கிடக்கு என்று கொந்தளித்துவிட்டாராம். சொந்த பிரச்னை காரணமாக தாமரை தலைமை ஏஜென்சிகளை ஏவிவிட்டு ரெய்டு நடக்காமல் இருக்க தான் இந்த ரகசிய உறவாம். இந்த விஷயம் கேள்விபட்ட சேலம்காரர் உச்சகட்ட டென்ஷனுக்கு போனாராம். டெல்டாவில் டெக்ஸ்டைல்ஸ், மனுநீதிசோழன், கடலோர மாவட்டங்களில் மாஜி அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்க சேலம்காரர் அவரது டீமுக்கு ரகசிய உத்தரவிட்டுள்ளாராம். தனது டீம் மீதும் நம்பிக்கை இல்லாமல் தனக்கு வேண்டிய நபர்கள் மூலமும் மாஜி அமைச்சர்களை ரகசியமாக கண்காணித்து வருகிறாராம். இலை கட்சியில் இந்த ‘டாப்பிக்’ தான் டெல்டா மாவட்டத்தில் ஹைலைட்டாக ஓடிக் கொண்டிருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை உறவை முறித்து கொண்டது குக்கர், தேனிக்காரர் தரப்பில் மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்காமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அரசியல் களத்தில் எதுவும் நடக்கலாம். அப்படி ஒரு முடிவு சேலம்காரருக்கு நடக்கப்போகிறது என்று தேனிகாரர், குக்கர்காரர் நினைக்கிறாங்களாம். தற்போதைக்கு டெல்லியில் உள்ள தேசிய கட்சியின் தலைவர்களை பிடித்து தாமரையின் விவிஐபி தலைவர்களை பிடித்து பாலிடிக்ஸ் செய்து கொண்டிருக்கிறார்களாம். இலை கட்சி, சின்னம் எங்களுக்கு வேண்டும். அதுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய நாங்க தயார்… எங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் நாடாளுமன்ற தேர்தலில் 50:50 பார்முலா பயன்படுத்தி கொள்ளலாம் என்று தேனி தரப்பு, டெல்லி தலைமைக்கு சிக்னல் கொடுத்துள்ளதாம். மேலும், இலைக்கட்சி, தாமரை கூட்டணி முறிவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டம் உள்ளிட்ட தென்பகுதியில் தேனிக்காரர், குக்கர் ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாடி வர்றாங்க. தாமரை, இலை என இரு கட்சிக்காரர்களும் மாறி, மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி கொண்டுள்ளார்களாம். இவர்கள் பிரிந்ததில் எங்களுக்கு தான் ‘முழு வெற்றி’ என்று தேனிக்காரர், குக்கர் தரப்பினர் இனிப்பு வழங்கி கொண்டாடினாங்க. அவர்கள் பிரிந்தால் அது எப்படி உங்களுக்கு சாதகமாக முடியும் என்று பலர் கேட்டாங்களாம். அதற்கு தேனி, குக்கர் தரப்பினர், தாமரைக்காரர்களின் பார்வை தங்கள் மீது விழும்; தாமரைத் தலைமையின் கோபம் சேலத்துக்காரர் மீது விழுந்து, நிலுவை வழக்குகளை தூசு தட்டுவதும், நடவடிக்கை எடுப்பதும் இனி தொடர்ந்து நடக்கும். தாமரை தலைமையில் இருந்து தேனிக்காரர், குக்கர்காரருக்கு டெல்லி தலைமை கூட்டணி வலை வீசும் என்று நம்பிக்கையோடு காத்துள்ளார்களாம்… தற்போதைக்கு அங்கிருந்து சிக்னல் வந்தால் விமானத்தில் டெல்லிக்கு பறக்க தேனிகாரரும், குக்கர்காரரும் தயாராக இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை மூலம் இலை கட்சியில எம்பி சீட்டுக்கு ‘மூவ்’ செய்தவர்கள் நிலைமை கவலைக்கிடமாயிருச்சே..’’ என்று சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கும், தாமரைக்கும் ஏற்பட்டுள்ள விரிசல் தேர்தலில் ஒரு சீட் கிடைக்கும் என்ற கனவில் இருந்த முன்னாள் மாஜிக்களை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்காம். கட்சி தாவுவதையே வாடிக்கையாக கொண்ட சில மாஜிக்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாமரை கட்சியில் ஐக்கியம் ஆனாங்க. அந்த கட்சியின் பருப்பு எந்த நிலையிலும் தமிழ்நாட்டில் வேகாது என்பது இவர்களுக்கு நல்லாவே தெரியுமாம். எப்படியும் தாமரை கட்சி இலைகட்சியின் முதுகில் ஏறித்தான் டிராவல் பண்ணும். அப்போது நாங்கள் பவர்புல்லான முன்னாள் மாஜிக்கள் என்பதை முன் வைத்து தாமரையிடம் ஒரு சீட்டு கேட்டு வாங்கலாம். ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றாலும் பேரம் பேசி பெருத்த லாபம் பார்க்கலாம் என்பது தான் அவர்களின் மைன்ட் செட்டாக இருந்ததாம். இப்படிப்பட்ட நிலையில் இலை கட்சி வேட்டு வச்சது இந்த மாஜிக்களுக்கு பெருத்த அதிர்ச்சியாக மாறியிருக்காம். கனவுக்கோட்டை தகர்ந்த நிலையில் இலைக்கட்சி உணர்வுப்பூர்வமாக இந்த முடிவை எடுத்திருக்கு. கொள்கை ரீதியாக எடுக்கலை. அதனால் கண்டிப்பா நம்ம கூட்டணியில் வந்திருவாங்க. சீட்டு நமக்குத்தான் என்று அடிப்பொடிகளிடம் சொல்லி, தனக்கு தானே ஆறுதல்படுத்திக்கிட்டு இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post டெல்லிக்கு படையெடுக்க தயாராகி வரும் தேனி, குக்கர் தரப்பினரின் நடவடிக்கை குறித்து சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Theni ,Delhi ,wiki Yananda ,Yaru ,Lotus Party ,Alliance ,Peter Uncle ,Lotus ,Honey ,wiki ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு