×

ஆசிய விளையாட்டு ஹாக்கி சிங்கப்பூரை சிதைத்தது இந்தியா: மீண்டும் 16 கோல் போட்டு மிரட்டல்

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் ஹாக்கியில், இந்திய அணி மீண்டும் 16 கோல் போட்டு சிங்கப்பூர் அணியை சிதைத்தது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, முதல் லீக் ஆட்டத்தில் 16-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை ஊதித் தள்ளியது. அடுத்து 2வது ஆட்டத்தில் நேற்று சிங்கப்பூர் அணியை எதிர்கொண்டது. முதல் 12 நிமிடங்களுக்கு தாக்குப்பிடித்த சிங்கப்பூர் அணி, அதன் பிறகு இந்திய வீரர்களின் ஒருங்கிணைந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஸ்தம்பித்தது. இடைவேளையின்போது 6-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த இந்தியா, 2வது பாதியிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கோல் மழை பொழிந்தது.

ஆட்ட நேர முடிவில் இந்தியா 16-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் 24, 39, 40, 42வது நிமிடங்களில் கிடைத்த 4 பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் கோலாக மாற்றினார். மன்தீப் சிங் 12, 30, 51வது நிமிடங்களில் ஃபீல்டு கோல் போட்டு ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். அபிஷேக், வருண் குமார் தலா 2 கோல், லலித்குமார், குர்ஜன் சிங், விவேக் பிரசாத், மன்பிரீத் சிங், ஷம்ஷேர் சிங் தலா 1 கோல் போட்டனர். சிங்கப்பூர் தரப்பில் ஜாகி ஜூல்கர்னயர் 53வது நிமிடத்தில் ஆறுதல் கோல் அடித்தார் (ஃபீல்டு கோல்). சிங்கப்பூர் தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 0-11 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்திருந்தது. இந்தியா தனது 3வது லீக் ஆட்டத்தில் நாளை ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது.

The post ஆசிய விளையாட்டு ஹாக்கி சிங்கப்பூரை சிதைத்தது இந்தியா: மீண்டும் 16 கோல் போட்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Asian Games Hockey ,India ,Singapore ,Hangzhou ,Asian Games ,
× RELATED சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் சாத்விக் – சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி