×

மபி சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு சீட் இல்லையா? பா.ஜ வெளியிட்ட 3 பட்டியலிலும் பெயர் இல்லாததால் பரபரப்பு

போபால்: மபி சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு இதுவரை சீட் வழங்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2018ம் ஆண்டு மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 114 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. 109 இடங்களில் வென்ற பா.ஜ எதிர்க்கட்சி. ஆனால் காங்கிரஸ் மூத்ததலைவராக திகழ்ந்த ஜோதிராதித்யா சிந்தியா கட்சியில் இருந்து 22 எம்எல்ஏக்களுடன் வெளியேறி பா.ஜவில் இணைந்ததால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் மபியில் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜ ஆட்சி அமைத்தது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளுக்கு நேற்று வரை பா.ஜ சார்பில் 79 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திர தோமர், பிரஹலாத் படேல், பக்கன் குலாஸ்தே மற்றும் பா.ஜ தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா ஆகியோரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஆனால் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் பெயர் பட்டியலில் இல்லை. அவர் ஓரங்கட்டப்படுகிறாரா, இந்த தேர்தலில் அவருக்கு பா.ஜ மேலிடம் சீட் வழங்காதா என்ற கேள்விகள் தற்போது மபி அரசியலில் புயலை கிளப்பி உள்ளன. ஏனெனில் மபியில் மிக நீண்ட காலம், அதாவது கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருப்பவர் சிவ்ராஜ் சிங் சவுகான். ஆனால் அவரது பெயர் பா.ஜ வெளியிட்ட 3 வேட்பாளர் பட்டியலிலும் அவர் பெயர் இடம் பெறாதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றிய கேள்விக்கு பா.ஜ மேலிடம் உறுதியான பதிலை அளிக்கவில்லை.

ஆனால் பாஜ உயர்மட்ட வட்டாரங்கள் கூறுகையில், ‘ சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை. ஆனால் தேர்தலுக்குப் பிறகு எந்த பெரிய தலைவரும் முதல்வராகலாம்’ என்று தெரிவித்து உள்ளனர். எனவே மபி அரசியல் தீ இப்போதே பற்றி எரியத் தொடங்கி விட்டது. இன்னும் பா.ஜ சார்பில் 151 பேர் பட்டியல் அறிவிக்க வேண்டும். அதில் சிவ்ராஜ்சிங் சவுகான் பெயர் இடம் பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

* இப்போதே தோல்வியை பா.ஜ ஏற்றுக்கொண்டது
முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் பெயர் வேட்பாளர் பட்டியலில் இதுவரை இல்லாததை காங்கிரஸ் கட்சி கேலி செய்துள்ளது. இதுபற்றி மபி காங்கிரஸ் கூறுகையில்,’ பா.ஜ வேட்பாளர் பட்டியலை பார்க்கும் போது காங்கிரசின் பலத்தை அவர்கள் உணர்ந்து விட்டதையும், இப்போதே தோல்வியை பா.ஜ ஏற்றுக்கொண்டதையும் காட்டுகிறது’ என்று தெரிவித்தது. முன்னாள் முதல்வர் கமல்நாத் கூறுகையில், ‘கோடிக்கணக்கான தொழிலாளர்களின் கட்சி என்று கூறிக்கொள்ளும் பாஜவின் உள்கட்சி தோல்வியின் வெளிப்பாடு இது. வெற்றி நம்பிக்கை இல்லாத நெருக்கடியை பாஜ சந்தித்து வருகிறது. இம்முறை தனது மிகப்பெரிய கோட்டையான மபியில் பா.ஜ மிகப்பெரிய தோல்வியை காணும். காங்கிரஸ் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறப்போகிறது. பாஜவின் ‘டபுள் எஞ்சின்’ அரசு இரட்டை தோல்வியை நோக்கி நகர்கிறது. அதைத்தான் எம்பிக்களுக்கு இந்த தேர்தலில் பா.ஜ சீட் கொடுத்து இருப்பது காட்டுகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

* முதல்வர் பதவி பறிப்பா?
3 வேட்பாளர் பட்டியல் வெளியிட்டும் இதுவரை சிவ்ராஜ்சிங் சவுகான் பெயர் இல்லாததால் அவரது முதல்வர் பதவிபறிக்கப்படும் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன. இதுபற்றி பா.ஜ வட்டாரங்கள் கூறுகையில்,’ மபி தேர்தல் மிகவிரைவில் வர உள்ளது. இந்த சூழலில் சிவ்ராஜ்சிங் சவுகானிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்படும் என்ற தகவல் முற்றிலும் தவறு. ஆனால் தேர்தல் வெற்றிக்குப்பிறகு எந்த ஒரு தலைவரும் முதல்வராகலாம். இதை மறுப்பதற்கு இல்லை’ என்று குறிப்பிட்டனர்.

* 3வது பட்டியலில் ஒரே ஒரு பெயர்
மபி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ வேட்பாளர் 3வது பட்டியல் நேற்று வெளியானது. இதில் ஒரே ஒரு பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அங்குள்ள அமரவாடா தொகுதியில் கோண்டா சமூக தலைவர் மன்மோகன் ஷா பாட்டியின் மகள் மோனிகா பாட்டி போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி கமல்நாத்தின் சொந்த மாவட்டமான சிந்த்வாராவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மபி சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு சீட் இல்லையா? பா.ஜ வெளியிட்ட 3 பட்டியலிலும் பெயர் இல்லாததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Shivraj Singh Chauhan ,Mabi assembly elections ,BJP ,Bhopal ,Dinakaran ,
× RELATED கனமழை பாதித்த இடங்களுக்கு செல்ல...