×

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் முழுஅடைப்பு போராட்டம்

பெங்களூரு: தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் நேற்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு கர்நாடக நீர் நிலை பாதுகாப்பு கமிட்டி அழைப்பு விடுத்தது. இதையடுத்து, நகரம் முழுவதும் 144வது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று காலை 6 மணிக்கு முழுஅடைப்பு போராட்டம் துவங்கியது. பெங்களூரூ முழுவதும் வர்த்தக நிறுவனங்கள், சிறிய, நடுத்தர தொழிற்சாலைகள், கார்மென்ட்ஸ் கம்பெனிகள் மூடப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டது.

ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் இயங்கியது. மாநகரில் லாரி, கார், சில பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்கவில்லை. அரசு மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக பஸ்கள், கால் டாக்சிகள், மெட்ரோ ரயில் இயங்கியது. இருப்பினும் பயணிகள் குறைவாக இருந்தனர். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ரயில், பஸ்களில் மாநகருக்கு வரும் பயணிகள் சிரமம் இல்லாமல் மாநகர பஸ்களில் வீடுகளுக்கு சென்றனர்.

பெட்ரோல் பங்குகள், ஓட்டல்கள் திறந்திருந்தது. இருப்பினும் வாடிக்கையாளர் இல்லை. கே.ஆர்.மார்கெட், யஷ்வந்தபுரம், மல்லேஸ்வரம் உள்ளிட்ட மார்க்கெட்களில் கடைகள் திறக்கபட்டிருந்தன. முழு அடைப்பு போராட்டம் பொது மக்கள் இயல்பு வாழ்க்கையை பாதிக்காமல் நடந்தது.

தமிழ்நாட்டிற்கு பஸ் நிறுத்தம்
வழக்கமாக தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்லும். முழு அடைப்பு காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் தமிழ்நாட்டில் இருந்து பெங்களூரு வரும் பஸ் சேவை நிறுத்தப்பட்டது. ஓசூர் பஸ் ஸ்டாண்டில் 500க்கும் மேற்பட்ட தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பிற்காக தமிழக- கர்நாடக எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் மாலை புறப்பட்டுச் சென்ற லாரிகள், மாநில எல்லைப்பகுதியான ஓசூர், ஜூஜூவாடி, அத்திப்பள்ளி பகுதியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய லாரிகள் அனைத்தும், எல்லைப்பகுதியான நிப்பானி என்னும் இடத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டன. ஒட்டுமொத்தமாக இரு மார்க்கத்திலும் நேற்று 50 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டது.

The post தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் முழுஅடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Bangalore ,Bengaluru ,Kaviri ,
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு: மழை, வெள்ள...