×

4வது நாளாக களத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; மாம்பலம் கால்வாய் தூர்வாரும் பணி, மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் நேரில் ஆய்வு:

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து பெய்து வரும் மழை நீரை அகற்றும் பணிகளை முதல்வர் 4வது நாளாக இன்றும் ஆய்வு செய்தார். முன்னதாக மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் தொலைபேசியில் நேரில் பேசி குறைகளை கேட்டறிந்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. அன்று முதல் இன்று வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 6ம் தேதி ஒரே நாள் இரவில் 23 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையில் சாலை மற்றும் வீடுகள் சில இடங்களில் மழை வெள்ள நீர் தேங்கியது. வழக்கமாக மழை தண்ணீர் தேங்கியவுடன் அதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், சென்னையில் 6ம் தேதி முதல் விட்டு விட்டு மழை பெய்வதால் தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் தண்ணீரை வெளியேற்றினாலும் மீண்டும் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது.சென்னையில் மழை நீர் தேங்கியுள்ளது பற்றி தகவல் கிடைத்ததும், கடந்த 7ம் தேதி காலை முதல் நேற்று வரை தொடர்ந்து 3 நாட்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளுக்கே நேரடியாக சென்று மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகிறார். மேலும், வெள்ள நீரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கினார். அதன்படி வடசென்னை, தென்சென்னை, கொளத்தூர் தொகுதி உள்ளிட்ட பல இடங்களில் முதல்வர் கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்தார்.இந்த நிலையில் வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.வெள்ள நீர் பாதிக்கப்பட்டால் உடனடியாக மீட்பு நடவடிக்கை தேவைப்படுவோர் சென்னையில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள 1077 என்ற தொலைபேசி எண்ணுக்கு 24 மணி நேரமும் பொதுமக்கள் அழைக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 24 மணி நேரமும் அங்கேயே உட்கார்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு திடீரென வந்தார். அங்கு இருந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளுடன், பொதுமக்கள் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், கட்டுப்பாட்டு மையத்துக்கு பொதுமக்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து பேசியதுடன், தொலைபேசியில் பேசிய நபருக்கு தேவையான உதவியை உடனடியாக செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து மாம்பலம் பகுதிக்கு சென்று, அங்கு கால்வாய் அடைப்பை சரி செய்யும் பணியை ஆய்வு செய்தார். முன்னதாக, மாம்பலம் பகுதி மக்கள் பலரும் தொடர்ந்து 4 நாட்களாக தி.நகர் மற்றும் மாம்பலம் பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதையேற்று, மாம்பலம் கால்வாயில் உடனடியாக தூர்வார உத்தரவிட்டார். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் தூர்வாரும் பணிகளை இன்று அதிகாலை முதல் கொட்டும் மழையிலும் செய்து வந்தனர். அந்த பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். விரைவில் கால்வாயை தூர்வாரி மழைநீர் செல்ல எந்த தடையும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தி.நகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்….

The post 4வது நாளாக களத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; மாம்பலம் கால்வாய் தூர்வாரும் பணி, மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் நேரில் ஆய்வு: appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BD ,G.K. Stalin ,Mangalam Canal ,State Disaster Control Center ,Chennai ,Rain Water Dismantling ,B.C. ,Mangalam ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...