
சென்னை: சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து மாண்புமிகு மேயர் பிரியா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். அதை தொடர்ந்து, பெரம்பூர் நெடுஞ்சாலையில் மேயர் பிரியா மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மங்களபுரி பேருந்து நிறுத்த நிழற்குடையினை மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து, ஆதிகேசவ நகர் பிரதான சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரினை அகற்றிட சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
பின்னர், பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள பொதுக்கழிப்பிடத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கழிப்பறையினை சுத்தமாகப் பராமரித்திடவும், ஏகாங்கிபுரம் கால்வாயினைப் பார்வையிட்டு, அங்கு தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை உடனடியாக அகற்றிடவும் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, சாஸ்திரி நகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி சுத்தமாகப் பராமரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சந்திரயோகி சமாதி சாலையில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார்.
தொடர்ந்து, வார்டு-74க்குட்பட்ட மங்களபுரி, கிருஷ்ணதாஸ் சாலையில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் மேயர் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளிக் கட்டிடப் பணியினையும், நியூ வாழைமா நகர், 8வது தெருவில் மேயர் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் இறகுப்பந்து கூடம் அமைக்கும் பணியினையும், பிரிஸ்லி நகரில் மூலதன நிதியின் கீழ் ரூ.20 மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை குறித்த காலத்திற்குள் தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மண்டல அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post சென்னை மாநகராட்சி பகுதிகளில் திட்ட பணிகளை மேயர் ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு appeared first on Dinakaran.