×

கேட்பாரற்ற வாகனங்கள் அகற்றும் பணி 205 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: மின்னணு ஏலம் விட நடவடிக்கை

சென்னை: சென்னையில் கேட்பாரற்ற வாகனங்கள் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 205 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், அவற்றை மின்னணு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் மேயர் பிரியா கூறினார். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றுவது மற்றும் வாகன நிறுத்த மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டிடக் கூட்டரங்கில் நேற்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது.

அப்போது, மேயர் பிரியா பேசியதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைவிடப்பட்ட வாகனங்கள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும், செப்டம்பர் 1ம் தேதி முதல் காவல் துறையின் உதவியுடன் இந்தப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைவிடப்பட்ட வாகனங்களாக வடக்கு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் 271 வாகனங்கள், மத்திய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் 644 வாகனங்கள் மற்றும் தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் 393 வாகனங்கள் என மொத்தம் 1,308 வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில் வடக்கு வட்டாரப் பகுதிகளில் 43 வாகனங்கள், மத்திய வட்டாரப் பகுதிகளில் 137 வாகனங்கள் மற்றும் தெற்கு வட்டாரப் பகுதிகளில் 25 வாகனங்கள் என மொத்தம் 205 வாகனங்கள் அகற்றப்பட்டு மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் உரிமையாளர்களால் உரிமை கோரப்பட்ட 51 வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 154 உரிமை கோரப்படாத வாகனங்களும், வரும் 30ம்தேதி வரை அகற்றப்படும் வாகனங்களும் சேர்த்து மின்னணு ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், ஏலம் விடப்பட உள்ள வாகனங்களின் விவரங்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் தெரியப்படுத்தப்பட்டு, வாகன உரிமையாளர்களால் வாகனங்களை திரும்பப் பெறுவதற்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். அதன் பின்னரும் யாரும் உரிமைக் கோராத வாகனங்கள் மின்னணு ஏலம் விடப்படும். மேலும், வாகனங்களை மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறின்றி மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்ட இடங்களில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆலோசித்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையாளர் லலிதா, வட்டார துணை ஆணையாளர்கள் எம்.சிவகுரு பிரபாகரன், எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், எம்.பி.அமித், தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) என்.மகேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கேட்பாரற்ற வாகனங்கள் அகற்றும் பணி 205 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: மின்னணு ஏலம் விட நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...