×

வருமான வரித்துறை இயக்குனர் வேண்டுகோள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உதவியாக வணிகர்கள் இருக்க வேண்டும்

சென்னை: லஞ்சத்திற்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறைக்கு உதவியாக வணிகர்கள் இருக்க வேண்டும் என வருமான வரி துறை கூடுதல் பொது இயக்குனர் ஸ்வப்னா நானு வேண்டுகோள் விடுத்துள்ளார். வருமான வரித்துறை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக வணிகர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது. இந்த கூட்டத்தில் வருமான வரி துறை கூடுதல் பொது இயக்குனர் (கண்காணிப்பு பிரிவு) தெற்கு ஸ்வப்னா நானு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைமை செயலாளர் ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, சென்னை மண்டல தலைவர் ஜோதிலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர். ‘பொது நலன் வெளிப்படுத்துதல் மற்றும் தகவல் தருபவர்களின் பாதுகாப்புத் உறுதிசெய்தல்’ தலைப்பின் கீழ் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர். மேலும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் வணிகர்கள் தங்களின் சந்தேகங்களை நேரில் கேட்டு அறிந்தார்கள்.

பின்னர் மேடையில் ஸ்வப்னா நானு கூறியதாவது: ஒவ்வொரு வருடமும் லஞ்ச ஒழிப்பு வாரம் அக்டோபர் மாத இறுதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் மக்களை நேரடியாக சந்தித்து வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம். இந்த முடிவின் தொடர்ச்சியாக முதல் முறையாக நாங்கள் வணிகர்களை நேரில் சந்தித்து லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு அளிக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் கடிதம் மூலம் புகார் அளிக்கும் போது கடிதத்தில் வெளியில் புகார் அளித்தவரின் விவரம் இருக்கும், இதனால் அவர்களுக்கு பாதிப்பு என்று கருதி தற்போது புதிய தீர்மானத்தை கொண்டு வந்து உள்ளோம். பிஐடிபிஐ (PIDPI) என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

புகார் கடிதத்தின் மேல் பிஐடிபிஐ புகார் என்று எழுதி இருந்தால் போதும் அதை உயர் அதிகாரிகள் மட்டுமே புகாரை பெற்று விசாரிபார்கள். இதை தான் தமிழில் ‘பொது நலன் வெளிப்படுத்துதல் மற்றும் தகவல் தருபவர்களின் பாதுகாப்புத் உறுதிசெய்தல்’ என்று கூறுவோம். தபால் நிலையத்தில் கடிதம் மேல் பிஐடிபிஐ புகார் எழுதி இருந்தால் போதும் உங்களுடைய விவரத்தை அவர்கள் கேட்கமாட்டார்கள். எனவே பொது நலன் கருதி புகார்தாரர்களின் விவரங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும், ஆகையால் லஞ்ச ஒழிப்பை குறித்து வணிகர்கள் உங்கள் புகார்களை அளிக்க தயங்காமல் முன் வர வேண்டும், நீங்கள் கொடுக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும். நாங்கள் லஞ்சத்திற்கு எதிராக போராடி வருகிறோம், அதற்கு நீங்களும் உதவியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வருமான வரித்துறை இயக்குனர் வேண்டுகோள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உதவியாக வணிகர்கள் இருக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Income Tax Director ,CHENNAI ,Income Tax Department ,
× RELATED பாஜகவின் கூட்டாளிகள்தான் அமலாக்கத்துறை: எம்.பி ஜோதிமணி