×

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற வேண்டும்: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் உத்தரவு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்வது தொடர்பாக சேவைத்துறை அலுவலர்களுடன், மாநகராட்சி ஆணையர் அழகுமீனா தலைமையில் ஆலோசனை கூட்டம், தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணி துறை ஆகியவற்றின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பருவமழைக்கு முன்னதாக அவ்விடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவும், பணி நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புகள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மாநகராட்சியில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும், வடிகால்களில் இருந்து அகற்றப்பட்ட வண்டல்களை சாலைகளில் தேக்கி வைக்காமல் உடனடியாக அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. சுரங்கப்பாதைகள், கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய இடங்களில் மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைக்கவும், மழையின் காரணமாக விழும் மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் மர அறுவை இயந்திரங்களை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை கண்டறியப்பட்டு உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டும் மழை வெள்ளத்தின் போது பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைக்கக்கூடிய நிவாரண மையங்களை தயார் நிலையில் வைக்கவும், மழைக்கால வியாதிகளுக்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக, அமைக்கப்பட்டுள்ள நடமாடும் மற்றும் நிலையான மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலையூர் பகுதியில் உள்ள சாலைகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடி கால் தூர்வாரும் பணிகளையும், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பராமரிக்கப்படும் பாலங்கள், சிறு பாலங்களில் மழைநீர் தேங்காமல் வெளியேற ஏதுவாக தேவையற்ற திடக்கழிவுகள், செடி, கொடிகள் போன்றவற்றை அகற்றிடவும், தேவையான எண்ணிக்கையில் நீரிறைக்கும் மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைக்கவும் உத்தரவிட்டார். பேருந்து சாலைகளில் காணப்படும் பழுதடைந்த, குண்டும், குழியுமான சாலைகளை சீரமைத்திட மற்றும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் மழைவெள்ள பாதிப்புகள் ஏற்படும் நேரத்தில் மீட்பு மற்றும் நிவாரன பணிகளை மாநகராட்சி மற்றும் இதர சேவை துறைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் மாநகராட்சி தலைமை பொறியாளர், நீர்வளத்துறை, பொதுப்பணி துறை, நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், மாநகராட்சியின் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், உதவி, இளநிலை பொறியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

* நோய் தடுப்பு பணிகள்
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொசு மருந்து, கொசுப்புகை மருந்துகள், பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை போதுமான அளவிற்கு இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழைக்கு முன்னதாக தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்வழிக் கால்வாய்களில் நீர்வளத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள தேவையான மணல் மூட்டைகளை தயார்நிலையில் வைக்கவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

The post பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற வேண்டும்: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Akummeena ,
× RELATED தாம்பரம் பகுதியில் மழை பாதிப்புகளை...