
புதுடெல்லி: இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆதார் பயோமெட்ரிக் முறையானது நம்பகத்தன்மையற்றது என்று மூடிஸ் வெளியிட்ட புகாருக்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம், ‘ஆதார்’ அடையாள அட்டையை நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளது. டிஜிட்டல் அடிப்படையிலான இந்த ஆதார் அட்டையை பயன்படுத்தி தான், அனைத்து வகையான தனிப்பட்ட செயல்பாடுகளையும் மேற்கொள்ள முடியும் என்ற அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆதார் அட்டையின் நம்பகத்தன்மை, தகவல் திருட்டு போன்ற பிரச்னைகள் அவ்வப்போது எழுந்தாலும் கூட, அவ்வாறு கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. மேலும் ‘உலகின் மிகவும் நம்பகமான டிஜிட்டல் ஐடி’ என்று தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் உலகளாவிய கடன் நிறுவனமான ‘மூடிஸ்’ வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆதார் அடையாள அட்டையானது பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த அடையாள அட்டையானது நம்பகத்தன்மையற்றது.
தனியுரிமை அபாயம், பாதுகாப்பற்றது’ என்று கூறியுள்ளது. இதனை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மறுத்ததுடன், அதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆதார் அடையாள அட்டையின் பாதுகாப்பு தன்மை குறித்து ‘மூடிஸ்’ கூற்றுகளை நிராகரிக்கிறோம். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற உலகளாவிய அமைப்புகள் ஆதார் பயன்பாட்டை பாராட்டி உள்ளன. ஆதாரை தங்களது நாடுகளில் அமல்படுத்துவது குறித்து பல நாடுகள் இந்தியாவின் ஆலோசனைகளை கேட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளது.
The post இந்தியாவில் பயன்படுத்தப்படும் ‘ஆதார்’ மீது நம்பிக்கையில்லை? ‘மூடிஸ்’ புகாருக்கு ஒன்றிய அரசு மறுப்பு appeared first on Dinakaran.