×

தமிழகத்தில் ஆவின் பாலின் விலை உயர்த்தப்படாது: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

சென்னை: ஆவின் நிறுவனத்துக்கு தரமான பாலை விநியோகம் செய்தால், லிட்டருக்கு ஒரு ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் பால் விலை இப்போதைக்கு உயர்த்தப்படாது என்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி அளித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், “தமிழ்நாட்டில் ஆவின் நல்ல வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்பதற்காக கடந்த 3 மாதத்தில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. எங்கு கூட்டுறவு சங்கங்கள் இல்லையோ அங்கு அவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 3 மாதத்தில் 31 ஆயிரம் மாடுகளுக்கு கடன் கொடுக்கப்பட்டு புதிதாக கறவை மாடுகள் வாங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1 கோடியே 45 லட்சம் அளவிற்கு இருந்த விற்பனை இந்தாண்டு 2 கோடியே 40 லட்சம் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. ஆவினில் கடந்த மாதம் 6.9 சதவீதம் மின் சேமிப்பு இருந்துள்ளது. ஆவின் லாபகரமான நிறுவனமாக விரைவில் வர இருக்கிறது. பால் உற்பத்தியாளர்கள் யாருக்கும் எங்கும் நிலுவை தொகை இல்லை. மிக தரமான பால் தர கூடியவர்களுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு 1 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவது விரைவில் செயல்படுத்தப்படும்.

பால் கொள்முதல் விலை உயர்த்துவது குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவெடுக்கப்படும், மேலும் பால் விலையை உயர்த்தும் நடவடிக்கை இப்போதைக்கு இல்லை. மறு சுழற்சி செய்யக்கூடிய பாக்கெட்டுகளில் தான் ஆவின் பால் செய்யப்படுகிறது. தற்போது உடனடியாக பாட்டில்களில் பால் வழங்குவது கடினமான ஒன்று” என்றார்.

The post தமிழகத்தில் ஆவின் பாலின் விலை உயர்த்தப்படாது: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Mano Thangaraj ,Chennai ,Awin ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...