- கன்னதா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- நாடாத்திக் ஒருங்கிணைப்பாளர்
- சீமான்
- சென்னை
- கன்னடம்
- தமிழ்நாடு அரசு
- உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்
சென்னை: தமிழ்நாடு அரசினையும், முதலமைச்சரையும் அவமதிக்கும் கன்னட இன வெறியர்களின் செயலை தடுத்து நிறுத்துவதோடு, உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நதிநீரை உடனடியாக வழங்க வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகையில்; “தமிழ்நாட்டிற்கு உரிமையான காவிரி நதி நீரை உரிய அளவில் தர மறுத்து வரும் கர்நாடக அரசு நீதிமன்ற உத்தரவுபடி திறந்துவிடும் சொற்ப நீரையும் திறக்கக் கூடாது என கன்னட அமைப்புகள் போராடி வருவது சிறிதும் மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயலாகும். போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
அரை நூற்றாண்டு காவிரி உரிமை சட்டப்போராட்டத்தில், வரலாறு நெடுகிலும் தமிழ்நாடு காவிரி நதியில் தமக்குள்ள நீர் உரிமையை இழந்தே வந்துள்ளது. கீழ்ப்படுகை நாடுகளுக்கான பங்கு உலகெங்கும் குறைக்கப்பட்டதே இல்லை. ஆனால் சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் பங்கு படிப்படியாகச் சட்டத்தின் பெயராலேயே குறைக்கப்பட்டது.
இத்தனை துரோகங்களுக்குப் பிறகும், இறுதித் தீர்ப்பு அடிப்படையில் வழங்கப்பட்ட குறைந்தபட்ச காவிரி நீரைக்கூட சட்டப்படி அமைக்கப்பட்ட மேலாண்மை ஆணையம் மூலம் கர்நாடகத்திடம் கெஞ்சிக் கேட்டும் பெறமுடியவில்லை என்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம்.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீரப்பையே செயல்படுத்த முடியவில்லை என்றால் இதுதான் இந்தியாவின் ஒருமைப்பாடா? தன்னிச்சை அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தைக்கூட முறையாகச் சட்டப்படி இயங்கச் செய்து நீரினை பெற்றுத்தர முடியவில்லை என்றால் ஒன்றிய அரசு என்ற ஒன்று இந்த நாட்டிற்கு எதற்கு?
இதுதான் இந்தியாவின் கூட்டாட்சி முறையா? தமிழர்கள் இந்த நாட்டின் குடி மக்களா இல்லையா? ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே தேர்தல், ஒரே சட்டம் என்று ஒற்றைமயமாக்கல் பேசும் பாஜக, ஒரே நாட்டிற்குள் இருக்கும் கர்நாடகத்திடம் காவிரி நீரைப் பெற்றுத் தராதது ஏன்?
கர்நாடக அமைப்புகள் குறைந்தபட்ச மனித மாண்புடன் நடந்துகொள்ள வேண்டும். அறவழியில், அமைதியான முறையில் தங்களது எதிர்ப்புணர்வை தெரிவிக்க அனைவருக்கும் முழு உரிமையும் உண்டு. சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர், எட்டு கோடி தமிழ் மக்களின் அரசப் பிரதிநிதியாவார்.
எனவே, தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் கன்னட அமைப்புகள் அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பதிலுக்கு கருநாடக முதலமைச்சரை அவமதிக்க ஒரு நொடி ஆகாது. எனினும் தமிழரின் மாண்பு அத்தகைய இழிசெயலில் ஈடுபட அனுமதிக்காது.
ஆகவே, இனியும் தமிழர்களை அச்சுறுத்தி, தமிழ்நாடு அரசினையும், முதலமைச்சரையும் அவமதிக்கும் கன்னட இன வெறியர்களின் செயலை தடுத்து நிறுத்துவதோடு, உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நதிநீரை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் கர்நாடக அரசையும், இந்திய ஒன்றிய அரசையும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என சீமான் தெரிவித்துள்ளார்.
The post கன்னட இன வெறியர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் appeared first on Dinakaran.