×

ஆன்மிகம் பிட்ஸ்: கொடி மரத்தில் விநாயகர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கொடி மரத்தில் விநாயகர்

சிவாலயங்களிலும், சைவ சமயம் சார்ந்த முருகன், அம்பிகை, காளி முதலிய தெய்வங்களின் ஆலயங்களில் கொடி மரத்தில் சதுர்முகம் எனப்படும் அடிப்பட்டைப் பகுதியில் விநாயகர், முருகர், அஸ்திர தேவரான சூலம், அந்த கோயிலுக்குரிய தெய்வம் ஆகியோர் அமைந்துள்ளனர். பெரம்பாலான கொடி மரங்களில் விநாயகர் அழகாகக் காட்சி தருகிறார். கொடி மரத்திற்கு முன்பாக இருப்பதுடன், கொடி மரத்திலும் அவரைக் காண்கிறோம். படத்தில் திருவாரூரில் உள்ள கொடிமர சதுர்முகத்தில் இடம் பெற்றுள்ள கணபதி ஆவார்.

தேரடிப் பிள்ளையார்

ஆலய விழாக்களில் கருவறையே வீதிகளில் சக்கரம் பூண்டு பவனி வருவது போல் வருபவரை தேர்களாகும். ஆலயங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் தேர்த் திருவிழாவே சிறப்பு பெற்றதாக இருக்கிறது. ஊர் கூடித் தேர் இழுத்துவிழா கொண்டாடுகின்றனர். தேர்களில் தெய்வங்கள் அமரும் சிம்மாசனத்தைக் கொண்ட அடித்தட்டு மிக உயரத்தில் இருக்கும். அதில் தெய்வங்களை ஏற்றுவதற்குத் தேர் நிற்கும் இடத்தை ஒட்டிப் படிகளைக் கொண்ட உயரமான மேடைகளும், அதன்மீது விமானங்களுடன் கூடிய மண்டபங்களும் இருக்கும். இந்தப் படிகளுடன் கூடிய உயரமான மேடையைத் தேர்முட்டு என்றும் அதன்மீது அமையும் மண்டபம்தேர் முட்டுமண்டபம் என்றும் அழைக்கின்றனர்.

பெரிய தேர்கள் இருக்கும் அனைத்துத் தலங்களிலும் தேர்முட்டு மண்டபங்கள் பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன. இந்த மண்டபங்களுக்கு அருகில் விநாயகர் ஆலயம் இருக்கும். இதனைத் தேரடிப் பிள்ளையார் கோயில் என அழைப்பர். இவர் தேருக்குக் காவலாக இருக்கிறார். தேரை அலங்கரிக்கும் முன்பாக இவருக்குச் சிறப்பு செய்வர். திருவிடைமருதூரில் உள்ள தேரடி விநாயகர் ஆலயம் சிறப்புமிக்கதாக இருக்கிறது. தேரடி விநாயகர் கோயிலுக்கு அருகில் தேரடி கருப்பு, தேரடி முனீஸ்வரர் போன்ற நாட்டுப்புறக் கோயில்கள் இருக்கின்றன.

பட்டி விநாயகர்

கொங்கு நாட்டுக் கோயில்கள் அனைத்திற்கும் முன்பாக பட்டி சுற்றும் மேடை என்னும் பெயரில் அகன்ற மேடையும் அதன்மீது செழித்து வளர்ந்த அரச மரமும் இருக்கக் காண்கிறோம். சில தலங்களில் அரச மரத்துடன் வேம்பும் இணைந்து வளர்ந்துள்ளது. இந்த மேடையின் மீது மரத்தடியின் நாகப்பிணையல்களும் அவற்றின் நடுவே விநாயகரும் அமைந்திருக்கின்றனர். இவரை பட்டிப்பிள்ளையார் என்று அழைக்கின்றனர். கால்நடைகளான மாடுகளுக்குத் துன்பம் நேராதிருக்க இந்த பட்டி மேடையைச் சுற்றிவரச் செய்வர். இந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை நோய் கண்ட மாடுகள் மீது தெளித்தால், அவை நோய் நீங்கிச் சுகம் பெறும் என்று நம்புகின்றனர்.

சப்தமாதர்களும் விநாயகரும்

ஆலயங்களின் வாயில்கள், கன்னிமூலைகள் ஆகிய இடங்களில் இருப்பதுடன் சில தெய்வங்களோடு இணைந்த வகையிலும் விநாயகர் இருக்கிறார். குறிப்பாக, சப்தமாதர் வரிசையின் தொடக்கத்தில் பிராமிக்கு அருகில் விநாயகரைக் காண்கிறோம். அபூர்வமாக சில தலங்களில் வரிசையில் இறுதியில் சாமுண்டிக்குப் பக்கத்திலும் அவரைக் காண்கிறோம். சிலாயங்களில் சப்தமாதர்கள் போர்த் தெய்வம், யோகநெறித் தெய்வம், குழந்தைகளைக் காக்கும் தெய்வம் என்ற பல நிலைகளில் வைத்து வழிபடுகின்றனர்.

சப்தமாதர்களைப் போர்த் தெய்வமாகத் தொழும்போது சப்தமாதர்களுடன் விநாயகரை முதலிலும், வீரபத்திரரை இறுதியிலும் வைத்து வழிபடுகிறாம். குழந்தைகளைக் காக்கும் தெய்வமாக வழிபடும்போது, சப்தமாதர்களுடன் விநாயகர், பாலசாஸ்தா விநாயகர், யோக சிவன் ஆகியோரை அமைத்து வழிபடுகிறோம். எந்த நிலையில் சப்தமாதரை வழிபட்டாலும், அவர்களுடன் விநாயகரை அமைக்கும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

தொகுப்பு: எஸ்.விஜயலட்சுமி

The post ஆன்மிகம் பிட்ஸ்: கொடி மரத்தில் விநாயகர் appeared first on Dinakaran.

Tags : Kunkumam ,Vinayakar ,Shrishalayas ,Murugan ,Ambikai ,Kali ,
× RELATED புளியங்குடி அருகே மூதாட்டியிடம்...