×

மணப்பாக்கம் கோலியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.63 கோடிமதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை

சென்னை: சென்னை மணப்பாக்கத்தில் உள்ள கோலியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.63 கோடி மதிப்பிலான 0.85 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படி இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி இன்று (26ம் தேதி) சென்னை, மணப்பாக்கம், அருள்மிகு குழலி அம்மன் என்கின்ற கோலியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.63 கோடி மதிப்பீட்டிலான சொத்து மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. சென்னை, மணப்பாக்கம், அருள்மிகு குழலி அம்மன் என்கின்ற கோலியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமாக 0.85 ஏக்கர் நிலம் கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ளது.

இந்நிலத்தினை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் சென்னை மண்டலம் இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின்படியும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படியும் இன்று சென்னை மண்டல உதவி ஆணையர் நித்யா முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியோடு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.

மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.63 கோடியாகும். இந்த அரசு பொறுப்பேற்ற 2021ம் ஆண்டு மே 7ம் தேதிமுதல் இன்று வரை ரூ.5,377 கோடி மதிப்பிலான 5,773.30 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது திருக்கோயில் செயல் அலுவலர் சக்தி, சிறப்பு பணி அலுவலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மணப்பாக்கம் கோலியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.63 கோடிமதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Manipakkam ,Goliamman Temple ,Chennai ,Chennai Manipakam ,Manipakam Goliamman Temple ,Hindu Religious Foundation Activity ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...