
குன்றத்தூர்: மாங்காடு அடுத்த பரணிபுத்தூர், சீனிவாசபுரம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரூபன் (40). ஆட்டோ டிரைவர். இவர் மீது போரூர் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. 2 பெண்களை திருமணம் செய்து, அதே பகுதியில் தனித்தனியாக குடித்தனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு அம்பத்தூரரை சேர்ந்த ஒருவரிடம் 2 ஷேர் ஆட்டோக்களை ரூ.1.5 லட்சம் கொடுத்து ரூபன் வாங்கினார். மீதி ரூ.3 லட்சத்தை தருவதாக கூறினார். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. அதனால் ஆட்டோக்களை விற்பனை செய்த உரிமையாளர், கடந்த சில தினங்களுக்கு முன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து ரூபனை போலீசார் அழைத்தனர். விசாரணைக்காக சென்ற ரூபன், பணத்திற்கு பதிலாக ஒரு ஆட்டோவை திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது, வரும் 24ம் தேதி வழக்கு விசாரணைக்கு மீண்டும் ஆஜராவேன் என்று காவல் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டு வந்தார். இந்நிலையில், நேற்று மாலை திடீரென வீடியோ ஒன்றை ரூபன் பதிவிட்டு, தனது 2வது மனைவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில், ‘அம்பத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் அதிகாரி ஒருவர், என்னை தகாத வார்த்தைகளால் மனம் புண்படும் வகையில் பேசினார்.
அதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. அதனால்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்’ என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதற்கிடையில், நீண்ட நேரமாக கதவை திறக்காததால் உறவினர்கள் சென்று பார்த்தனர். அப்போதுதான் ரூபன், தற்கொலை செய்தது தெரியவந்தது. உடனே மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பொய் வழக்கு போடுவதாக போலீஸ் அதிகாரி மிரட்டல்: வீடியோ பதிவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை appeared first on Dinakaran.