×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை நார் தொழிற்சாலைகளில் கதவடைப்பு போராட்டம்

பொள்ளாச்சி : கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகளவு இருப்பதுடன், தென்னை சார்ந்த பொருட்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. அதிலும், தென்னை நார் தொழிற்சாலை சுமார் 350-க்கும் மேற்பட்டவை செயல்படுகிறது.

இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தென்னை நார் மற்றும் நார் கழிவு உள்ளிட்டவை வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கே பெருமளவு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் நடக்கிறது. இதன் மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைகின்றனர்.

இந்நிலையில் நேற்று குடிசை மற்றும் குறு மின் நுகர்வோருக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும், வருடாந்திர மின் கட்டண அதிகரிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொழில் அமைப்புகள் நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தில், தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் நார் ஏற்றுமதி சங்கத்தினரும் பங்கேற்றனர்.

இதனால் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள சுமார் 350க்கும் மேற்பட்ட நார் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இதனால், நார் உற்பத்தி தொழிற்சாலைகளில் உற்பத்தி இல்லாமல், வெறிச்சோடி காட்சியளித்தது. தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் போராட்டத்தால், நேற்று ஒரே நாளில் மட்டும் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது என தென்னை நார் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை நார் தொழிற்சாலைகளில் கதவடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Lockdown ,Pollachi ,Coimbatore ,Anaimalai ,Kinathukadavu ,Negamam ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!