×

வேலூர் தொடக்க பள்ளியில் மழை நீர் புகுந்ததால் கோயிலில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியைகள்

*நீரை அகற்ற ஆய்வு செய்த கலெக்டர் உத்தரவு

*₹40 லட்சத்தில் கால்வாய் பணிக்கு அறிவுறுத்தல்

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட மாங்காய்மண்டி, கன்சால்பேட்டை, மீன் மார்கெட் மற்றும், அவ்லியாஷா தர்கா தெரு ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இந்நிலையில் வேலூர் முள்ளிப்பாளையம் அவ்லியாஷா தர்கா தெருவில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றியும் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது.

மேலும் சாலை முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். முழங்கால் அளவு தண்ணீரில் வெளியே வந்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். அப்பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அப்பகுதியில் செயல்படும் பாரதி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மழைநீர் புகுந்ததால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.
இதையடுத்து ஆசிரியைகள் மாணவ, மாணவிகளை அழைத்து வந்து கே.கே.நகரில் உள்ள 2 கோயில்களில் அமர வைத்து பாடம் நடத்தினர். ஒவ்வொரு ஆண்டும் மழை வரும் போதெல்லாம் இப்பகுதி வெள்ளத்தால் சூழப்படுகிறது. எனவே இதற்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் மழைவெள்ளம் பாதித்த பகுதிகளில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக வேலூர் மாங்காய் மண்டி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அவ்லியாஷா தர்கா தெருவில் ஆய்வு மேற்கொண்டு அங்கு தேங்கியுள்ள மழைநீரை இன்று மாலைக்குள் வெளியேற்றவும், இப்பகுதியில் தேங்கியுள்ள தேவையற்ற கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் அந்த தெருவில் ₹40 லட்சம் மதிப்பில் கால்வாய் அமைக்கும் பணிகளையும் விரைவில் தொடங்க அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, மேயர் சுஜாதா, ஆணையாளர் ரத்தினசாமி, துணை ஆணையாளர் சசிகலா, ஆர்டிஓ கவிதா, உட்பட பலர் உடனிருந்தனர்.
முன்னதாக மாங்காய் மண்டி அருகே மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ₹2 கோடி மதிப்பில் நடைப்பெற்று வரும் பாலப் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது கோட்ட பொறியாளர் தனசேகர், உதவி கோட்ட பொறியாளர் பிரகாஷ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

கால்வாயில் கழிவுகள் கொட்டினால் அபராதம்

கன்சால்பேட்டை பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கால்வாயில் தேவையற்ற பொருட்கள் தேங்கி நிற்பதை பார்வையிட்ட கலெக்டர் உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.
அருகில் உள்ள மாநகராட்சி மீன் மற்றும் இறைச்சி அங்காடிகளிலிருந்து அட்டை பெட்டிகள் உட்பட தேவையற்ற பொருட்கள் இக்கால்வாய் பகுதியில் வீசுவதை தவிர்த்து முறையாக மறுசுழற்சி செய்ய அறிவுறுத்தினார். மேலும், மாநகராட்சி வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதனை மீறி நீர்வழி கால்வாய்களில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அபராதத்துடன் கூடிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

The post வேலூர் தொடக்க பள்ளியில் மழை நீர் புகுந்ததால் கோயிலில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியைகள் appeared first on Dinakaran.

Tags : Vellore Primary School ,Vellore ,primary school ,Dinakaran ,
× RELATED சிறுபாசன ஏரிகளுக்கு நீர் செல்ல...