×

குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி செலவில் 37 மாவட்டங்களில் 1000 புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி செலவில் 1000 புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்து, கிராம ஊராட்சிக்கு இணையவழி மூலம் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தும் வசதி மற்றும் தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சிக் கணக்குகள் திட்டத்திற்கான இணையதளம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.9.2023) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 150 கோடி ரூபாய் செலவில் 37 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 1000 புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார். மேலும், கிராம ஊராட்சிக்கு பொதுமக்கள் வரி கட்டணங்கள் செலுத்துவதற்கான இணையதளம் மற்றும் தமிழ்நாடு எளிமைப்படுத்தபட்ட ஊராட்சிக் கணக்குகள் திட்டத்திற்கான இணையதளம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

கல்விக்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற பல்வேறு வரலாற்று முன்னெடுப்புகளை நிறைவேற்றி வருவதன் தொடர்ச்சியாக, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி மதிப்பீட்டில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். இத்திட்டம் “குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” என்று ஊரகப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் 1.2.2023 அன்று நடைபெற்ற அரசு விழாவில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, 8 மாத காலத்தில் முதற்கட்டமாக, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 150 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 1000 புதிய வகுப்பறைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இக்கட்டடங்கள் அனைத்தும் குழந்தை நேய சிறப்பு அமைப்புகளான உயர்த்தப்பட்ட மேற்கூரை, விசாலமான தாழ்வாரம், காற்றோட்டமிக்க ஜன்னல் வசதிகள், வழுக்காத தரைகள், கற்றலை ஊக்குவிக்கும் சுவர் ஓவியங்கள், வாழ்க்கைப் பாடங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணையவழி மூலம் செலுத்தும் வசதியைத் தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2022-23ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர்க் கட்டணம், உரிமக் கட்டணம் போன்றவற்றை தற்போது ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, ஊராட்சி செயலர் மூலமோ செலுத்த வேண்டியுள்ளது.

இச்சேவைகள் அனைத்தும் இணைய வழியில் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பொதுமக்கள் கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர்க் கட்டணம், வரியல்லாத கட்டணங்கள் போன்றவற்றை இணைய வழியில் செலுத்தும் வகையில் தேசிய தகவலியல் மையத்தால் (National Informatics centre) உருவாக்கப்பட்டுள்ள https://vptax.tnrd.tn.gov.in/ என்ற வரி செலுத்தும் முனையத்தை (Online Tax Portal) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். கடன் இவ்விணையதளத்தின் மூலமாக இணைய வழி கட்டணம் (Online Payment), ரொக்க அட்டைகள் (Debit / ATM Cards Payment), அட்டைகள் (Credit Card Payment), யுபிஐ கட்டணம் (UPI Payment) மூலம் செலுத்திட முடியும். இதன்மூலம், பொதுமக்கள் எளிதாக 24×7 முறையில் எந்நேரத்திலும் வரி கட்டணம் செலுத்திட இயலும்.

இதன்மூலம் பணியாளர்களின் பணிச்சுமை பெருமளவு குறைவதோடு, கிராம ஊராட்சியின் பொறுப்புணர்வும், வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்யப்படும். மேலும், பெறப்படும் வருவாய் இனங்களின் மூலம் கிராம ஊராட்சியின் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த இயலும். தமிழ்நாடு எளிமைப்படுத்தபட்ட ஊராட்சிக் கணக்குகள் திட்டத்தின் புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார்.கிராம ஊராட்சிகள் தற்போது ஊராட்சியின் பொதுநிதி, மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம், அரசின் திட்டப் பணிகள் போன்ற பல்வேறு பொறுப்புகளை மேற்கொள்ள 11 வகையான கணக்குகளை பராமரித்து வருவது கடினமான செயலாக உள்ளதால், அதனை எளிமைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு எளிமைப்படுத்தபட்ட ஊராட்சிக் கணக்குகள் திட்டத்தை உருவாக்கி, 3 கணக்குகளை மட்டுமே பராமரிக்கும் நிலையினை இந்தியன் வங்கியின் ஒத்துழைப்புடன் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சிகள் கணக்குகள் திட்டத்தின் TNPASS என்ற புதிய இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். இதன்மூலம், கிராம ஊராட்சித் தலைவர்கள் மேற்கூறிய கணக்குகளின் இருப்பு விவரங்களை அறிய வங்கி அலுவலரைச் சார்ந்து இருத்தலைக் குறைத்து, ஊராட்சிக்குத் தேவையான பணிகளை நிதி இருப்பிற்கு ஏற்ப உடனடியாக மேற்கொள்ளவும், நிதிப்பரிவர்த்தனைகளை நிகழ்நேரத்தில் அறிந்திடவும் இயலும்.

 

The post குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி செலவில் 37 மாவட்டங்களில் 1000 புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...