×

போடி அருகே சிலமலை கிராமத்தில் ஆக்கிரமிப்பின் பிடியில் வடக்கத்தியம்மன் கண்மாய்

*மீட்டெடுக்க விவசாயிகள் கோரிக்கை

போடி : போடி அருகே சிலமலை கிராமத்தில் சிக்கி கிடக்கும் வடக்கத்தியம்மன் கண்மாயை மீட்டு நிலத்தடி நீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்தி விவசாயிகளுக்கு தடையின்றி சாகுபடி பயிர்களை உற்பத்தி செய்வதற்கு வழிகாட்ட வேண்டும் என விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம் போடி மேற்கு மலை தொடர்ச்சி நீண்ட வரிசையில் அகமலை துவங்கி குரங்கணி, கொட்ட குடி, போடி மெட்டு, சாக்குலத்து மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி வரையில் தமிழக எல்லை முடிந்து கேரளா மாநிலம் தொடர்கிறது.

சிலமலை ராசிங்காபுரம் இரு கிராமங்களில் 16 ஆயிரத்திற்கும் மேல் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த மலை அடிவாரத்தில் போடி நாயக்கனூர், தர்மத்துப்பட்டி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்காபுரம், சங்கராபுரம், தேவாரம், பண்ணைபுரம், கோம்பை, உத்தமபாளையம், கம்பம், கூடலூர், லோயர் கேம்ப் என நீண்ட வரிசையில் தொடர்ச்சியாக விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட ஊர்கள் உள்ளன.

மழைக்காலங்களில் மலைகளில் பெய்யும் தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே ஊற்றெடுக்கும் அருவிகளும் சேர்ந்து காட்டாறு வெள்ளத்தோடு அடிவாரப்பகுதிகளில் வெள்ள பெருக்காக வந்து சேரும்.அந்த தண்ணீர் எல்லாம் வீணாகி போய் விடாமல் விவசாயத்தை பெருக்கி தேக்கி காக்கும் விதமாக அடிவாரப்பகுதிகளில் உள்ள தோட்டப் பகுதிகளுக்குக்கிடையே உருவாக் கப்பட்டுள்ள கண்மாய் குளங்களில் சென்று நிரம்புகிறது.

இந்நிலையில் போடி அருகே தேவாரம் சாலையில் சிலமலை கிராம ஊராட்சியில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருக்கின்றனர். இங்கு 4 சூலப்புரங்கள், 4 காலனிகள் சுற்றியுள்ள பகுதிகளில் வானம் பார்த்த மானாவாரி நிலங்கள் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் உள்ளன. நிலத்தடி நீர் ஊற்றெடுப்பதால் கிணறு, ஆழ்குழாய் போன்றவைகளின் மூலமாக பாசனநீர் கிடைப்ப தால் சாகுபடி பயிர்களை விவசாயி கள் விதைத்து வளர்த்தெடுத்து குறுகிய காலம், நீண்டகால பயிர்கள் விளைவித்து எடுக்கின்றனர்.

பல இடங்களில் சிறு, பெரிய, கண்மாய், குளங்களும் ஆங்காங்கே இருக்கின்றன. சிலமலை மல்லிகாபுரம் சாலையில் வடக்கத்தியம்மன் குளம் 20 ஏக்கர் அளவில் நூற்றாண்டை கடந்து நிற்கிறது. சிலமலை ராசிங்காபுரம் இடையில் உள்ள ஒண்டிவீரப்பன் சுவாமி கோயில் மலை அடிவாரத்தில் இருந்து மழை காலங்களில் வருகின்ற மழைநீரானது சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த வடக்கத்தியம்மன் கண்மாய்க்கு காட்டாறு வெள்ளமாக வந்து சேரும். தொடர்ந்து தண்ணீர் தேங்குவதால் சுற்றியுள்ள சுமார் 500க்கும் மேற் பட்ட ஏக்கர் நிலங்களுக்கு நிலத்தடி நீர் பாசனமாக கிடைப்பதால் தென்னை, நிலக்கடலை, காய்கறிகள், தக்காளி, பருத்தி, சோளம், கேழ்வரகு, மக்காச்சோளம் உள்ளிட்ட பல பயிர்கள் விளைகின்றன.

கடந்த 50 ஆண்டுகளாக இந்த குளத்தின் நிலபரப்புகளை ஆக்கிரமித்து விளைநிலங்களாக மாற்றிவை த்துள்ளனர். தொடர்ந்து இந்த குளத்தின் பராமரிப்பினை கை விடப்பட்டதால் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து நிலப்பரப்புகள் சுருங்கி குளமே தெரியாதளவிற்கு மண் மேவி மோசமான நிலையில் கேட்பாரற்று கிடக்கிறது.

அதேபோல் 7 கிலோ மீட்டர் வருகின்ற பாசன கால்வாயிலும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் வருகின்ற மழைநீர் காட்டாறு வெள்ளமாக வரும் போது சரிவர கடக்க முடியாமல் தடம் மாறி மெயின் சாலைகளில் குளமாக எப்போதும் தேங்கும் அவலம் உள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு நீர்நிலைகளை காப்பாற்றும் விதமாக வடக்கத்தியம்மன் குளத்தை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கைக்கு செவி சாய்க்காத ஓபிஎஸ்

வடக்கத்தியம்மன் கண்மாயினை சுற்றியுள்ள கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பினை அகற்ற வேண்டும், கால்வாய்களை தூர்வார வேண்டும், மழைநீர் சாலைகளில் தேங்காமல் இருக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கடந்த அதிமுக அரசிடம் மனு அளித்தனர். அப்போது ஓபிஎஸ் எம்எல்ஏவாக இருந்தார். அவரிடமும் இப்பகுதியினர் பலமுறை மனு அளித்தனர். ஆனாலும் இது குறித்து ஒரு துளி கூட அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.

தற்போதும் அவரே எம் எல் ஏவாக உள்ள நிலையில் திமுக அரசிடம் முறையிட்டு இப்பகுதியில் ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்தமுறையும் அவர் விவசாயிகளின் பேச்சுக்கு செவி சாய்க்காமல் மவுனம் காக்கிறார். இதனால் மேற்கொண்டு விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.

வருமானத்தை ஈட்டலாம்

வடக்கத்தியம்மன் கண்மாய் 20 ஏக்கரில் உள்ளது. இதில் சுமார் 19 ஏக்கரில் கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. இந்த கருவேல மரங்கள் ஆக்கிரமிப்புகளால் தண்ணீரை முழுவதும் வயல்வெளிகளுக்கு சென்றடையாமல் அவை தடுக்கின்றன. எனவே இந்த கண்மாயினை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு தூர்வார வேண்டும். மேலும் மழைநீரை சேமிக்க நான்கு பக்கமும் உள்ள கரைகளை உயர்த்தி மீன்களை வளர்க்கலாம்.

தொடர்ந்து மழைநீர் தேங்கும் போது நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பும் உள்ளது. மேலும் காணாமல் போய் இருக்கும் 7 கிமீ கால்வாய் வழிப்பாதைகளையும் மீட்டு இந்த குளத்திற்கு மழை நீர் வெள்ளம் தங்கு தடையின்றி வந்து சேர்வதை உறுதி செய்ய வேண்டும். இந்த குளத்தைச் சுற் றியுள்ள சுமார் 300 ஏக்கர் அளவில் தற்போது வர யில் விவசாய பணிகள் செய்ய முடியாமல் காய்ந்து வறண்ட நிலமாகவே இருக்கிறது.

The post போடி அருகே சிலமலை கிராமத்தில் ஆக்கிரமிப்பின் பிடியில் வடக்கத்தியம்மன் கண்மாய் appeared first on Dinakaran.

Tags : Vadakatthiamman Kanmai ,Silamalai village ,Bodi ,Silamalai ,Dinakaran ,
× RELATED கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து துவக்கம்