
*உணவு பாதுகாப்புத்துறை அதிரடி
ஊட்டி : கோத்தகிரியில் உள்ள மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் 44 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மீன் கடைகளில் பழைய மற்றும் கெட்டுப்போன மீன்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன. இப்புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் கோத்தகிரி உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், மீன்வள சார் ஆய்வாளர் ஆனந்த், மீன்வள மேற்பார்வையாளர் ஜீவானந்தம், மீன்வள உதவியாளர் பரமன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கோத்தகிரி பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட மீன் கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் சுமார் 44 கிலோ பழைய மற்றும் கொட்டுபோன மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் 4 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் சுேரஷ் கூறுகையில், ‘‘மீன் வியாபாரிகள் மீன்களை கொள்முதல் செய்யும்போது மீன்கள் தரமானவையாக உள்ளனவா? என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும்.
மீன்களை பல நாட்களாக குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். இதேபோல் மற்ற இறைச்சி கடைக்காரர்களும் தரமான இறைச்சியை மட்டுமே விற்பனை செய்திட வேண்டும். இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து எழும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
The post கோத்தகிரி கடைகளில் சோதனை 44 கிலோ கெட்டுபோன மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு appeared first on Dinakaran.