×

தாவரவியல் பூங்கா பகுதியில் நடைபாதை கடைகள் அகற்றம்

*சிறு வியாபாரிகள் வாக்குவாதம்

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்கா பகுதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த நடைபாதை கடைகளை நகராட்சி நிர்வாகம் அகற்ற முயன்ற நிலையில், சிறு வியாபாரிகள் தாங்களாகவே அகற்றி கொண்டனர். நகராட்சி அதிகாரிகள், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் வெளிப்பகுதியில் கார்டன் சாலை நடைபாதை, மதுவனா சாலை, ஆட்லி சாலையோரங்களில் சிறு வியாபாரிகள் சாலையோர கடை வைத்துள்ளனர். இவர்கள் கேரட் ேபான்ற காய்கறிகள், வேர்கடலை, பூக்கள்,விதைகள், சோளம் போன்றவற்றை சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்கின்றனர். பொம்மை, தொப்பி, குல்லா போன்றவற்றையும் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்க கூடிய வருவாயில் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி வந்து செல்லும் பகுதியாக தாவரவியல் பூங்கா பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலையோர கடைகள் நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சாலையோர வியாபாரிகள் நிரந்தரமாக கடை வைக்க அனுமதி கிடையாது. நாள்தோறும் விற்பனை பொருட்களை கொண்டு வந்து வைத்து விற்பனை செய்து விட்டு எடுத்து சென்று விட வேண்டும்.

ஆனால் இங்கு நிரந்தரமாக கடை வைத்துள்ளனர். இதனால் சீசன் சமயங்களில் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக நகராட்சி தரப்பில் கூறப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 120 கடைகள் அகற்றப்பட்டன.சாலையோர வியாபாரிகள் நலன் கருதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் நகராட்சி மூலம் நிரந்தர கடைகள் கட்டி தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதற்கட்டமாக 55 நிரந்தர கடைகள் கட்டி முடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இக்கடைகளை டெண்டர் விட கடந்த பிப்ரவரி மாதம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் டெண்டர் விடப்படவில்லை. இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் சிறு வியாபாரிகள் மீண்டும் கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில் ஊட்டி நகராட்சி ஆணையர் ஏகராஜ் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர் ரவி, நகரமைப்பு ஆய்வாளர் மீனாட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்காக வந்தனர். மேலும் பாதுகாப்பு கருதி ஊட்டி டவுன் டிஎஸ்பி., யசோதா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மீனாபிரியா, முரளிதரன் மேற்பார்வையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

நகராட்சி ஊழியர்கள் கடைகளை அகற்ற முயன்ற போது சிறு வியாபாரிகளுக்கும், நகராட்சி அதிகாரிகள், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறு வியாபாரிகளுக்கு ஆதரவாக சிஐடியு., மாவட்ட தலைவர் சங்கரலிங்கம், மாவட்ட பொருளாளர் நவீன்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறு வியாபாரிகளிடம் பேசிய காவல்துறையினர் இப்பிரச்னை தொடர்பாக நகராட்சி ஆணையர், மாவட்ட நிர்வாகத்தை சந்தித்து முறையிடுமாறு அறிவுறுத்தினர். மேலும் ஒத்துழைக்காத பட்சத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து வியாபாரிகள் தாங்களாகவே கடைகளை அகற்றி கொண்டனர். நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தாவரவியல் பூங்கா பகுதியில் உள்ள சாலையோர கடைகள் நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. சாலையோர வியாபாரிகள் நிரந்தரமாக கடை வைக்க அனுமதி கிடையாது. நாள்தோறும் விற்பனை பொருட்களை கொண்டு வந்து வைத்து விற்பனை செய்து விட்டு எடுத்து சென்று விட வேண்டும். ஆனால் இங்கு நிரந்தரமாக கடை வைத்துள்ளனர். இதனால் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.

இதுகுறித்து சிறு வியாபாரிகள் கூறுகையில், சுற்றுலா பயணிகளை நம்பி தாவரவியல் பூங்காவை ஒட்டியுள்ள நடைபாதையில் சிறு கடைகள் வைத்து பிழைப்பு நடத்தி வந்தோம். 120 சிறு வியாபாரிகள் உள்ள நிலையில் தற்போது 55 கடைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு கடை இல்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, என்றனர்.

The post தாவரவியல் பூங்கா பகுதியில் நடைபாதை கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Feeder Botanical Park ,Dinakaran ,
× RELATED பூங்கா செல்லும் சாலையில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றும் பணி துவக்கம்