×

தங்கத்தோடு நம் தேசிய கொடியும் ஜொலிக்கிறது: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜாம்பவான்கள் வாழ்த்து

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய-இலங்கை அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 116 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 46 ரன்களும், ரோட்ரிக்ஸ் 42 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில் டைட்டஸ் சாது 4 ஓவர்களில் வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்தியா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், “ஆசியப் போட்டிகளில் தங்கம் வெல்வது மிகச்சிறந்த சாதனை. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த உயரங்களுக்கு இந்திய மகளிர் வீராங்கனைகள் முன்னேற வேண்டும்’’ என்று வாழ்த்தியுள்ளார்.

இதேபோல், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, “தங்கத்தை போல் இந்திய தேசியக் கொடியும் மகளிர் கிரிக்கெட் அணியால் ஜொலிப்பதாக’’ வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், “இந்திய மகளிர் அணிக்கு மனப்பூர்வ வாழ்த்துகள். ஆசிய போட்டிகளில் கிரிக்கெட் பிரிவில் முதல் தங்கத்தை வென்று புதிய வரலாறு படைத்திருக்கிறார்கள். தங்க மங்கைகளின் சாதனையால் இந்தியா பெருமிதம் கொள்கிறது’’ என்று வாழ்த்தியுள்ளார். இதேபோல் முன்னாள் வீரர்களான அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோரும் வாழ்த்தியுள்ளனர்.

The post தங்கத்தோடு நம் தேசிய கொடியும் ஜொலிக்கிறது: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜாம்பவான்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Indian Women's Cricket Team ,Hangzhou ,Asian Games ,Giants ,Dinakaran ,
× RELATED சென்னையில் நாளை முதல் நடைபெற உள்ள...