×

கொள்ளிடம் பகுதியில் குறைந்து போனது வாத்து வளர்ப்பு தொழில்

கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதியில் அறுவடை செய்த வயல்களில் வாத்துகள் இரை தேடி வருவது காண்போரை வெகுவாக கவர்ந்தது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கடற்கரையோர பகுதியில் சிலர் வாத்துகளை வளர்த்து வந்தனர். வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதி, வாய்க்கால் குளம் ஏரி போன்ற நீர் நிலைகளில் வாத்துகள் வளர்ப்பது வழக்கம். பொதுவாக பகல் பொழுது முழுமையும் வாத்துகள் தண்ணீரில் மிதந்தும் தண்ணீரில் மூழ்கியும் தனது அலகால் நத்தை, நண்டு புழு உள்ளிட்டவை இரையாக்கி கொள்கின்றன. வாத்துகள் பெரும்பாலும் தண்ணீரில் வாழ்ந்து வருகின்றன.

இரவு நேரங்களில் மட்டும் அதற்கென பாதுகாக்கும் இடம் பட்டி போன்ற அமைப்பு ஏற்படுத்தி அதனை பாதுகாத்து வருகின்றனர். கொள்ளிடம் பகுதியில் வாத்து வளர்த்து வருவது பெரிதும் குறைந்துவிட்டது.இந்நிலையில் கடற்கரையோர பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான வாத்து கூட்டங்கள் குறுவை நெற்பயிர் அறுவடை செய்த வயல்களில் உணவுக்காக சென்று உணவை தேடிவிட்டு பின்னர் அப்பகுதியில் உள்ள தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது நாட்டு இனத்தை சேர்ந்த வாத்துகள் ஆகும். வாத்துகளின் முட்டைகள் மற்றும் இறைச்சி நல்ல விலை போய்க் கொண்டிருக்கின்றன.

இதனால் முட்டைகள் கேரளாவிற்கு அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் வாத்துக்களை பராமரித்து வளர்த்து வருவது தான் மிகவும் சிரமம் என்கிறார் வாத்து உரிமையாளர். இதனால் வாத்து வளர்ப்போர் அதனை விட்டுவிட்டு வெவ்வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். வாழ்த்துகளை வளர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் பல்வேறு சிரமங்கள் இருந்து வருகின்றன. இதனை முறையாக வளர்ப்பதன் மூலம் கணிசமான லாபம் ஈட்ட முடியும் என்றார்.

அறிஞர் சார்லஸ் டார்வின் மேற்கோள் படியும் மற்றும் தொல்பொருள் ஆய்வு சான்றின்படியும் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாத்து இனங்கள் இருந்ததாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வாத்துகள் தோன்றிய இடம் எகிப்து எனவும் கூறப்படுகிறது. வாத்துக்கள் பின்புறம் வளைந்து கொழுப்பு கொண்ட பகுதியினை பெற்றிருப்பதனால் அதன் பறக்கும் திறன் குறைவு. சில வகையான வாத்துகள் ஆண்டுக்கு 300 முட்டைகளும் சில வகை இனங்கள் அதற்கு குறைந்த அளவு முட்டைகளையும் இடுகின்றன.

ஆண் வாத்துக்கள் பொதுவாக பெண் வாத்துக்களை விட உயரமாகவும், நீண்ட கழுத்துடனும் காணப்படுகின்றன. ஆண் வாத்துக்கள் ஆபத்தினை ஏதும் உணர்ந்தால் மற்ற வாத்துகளுக்கும் நடுவில் போய் நிற்கும் அச்ச குணம் உடையவை. ஒவ்வொரு வாத்து வகைகளுக்கும் இறகுகள் பலவாறு இருக்கும். வாத்துகள் ரோமானியர் காலத்திலிருந்தே போற்றி பாதுகாக்கப்படும் இனமாக இருந்து வருகிறது.

நமது பகுதிகளில் நாட்டு இன வாத்துகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. முறையாக வளர்த்து பராமரிக்க போதிய சூழ்நிலைகள் கொள்ளிடம் வட்டார பகுதியில் இல்லாமல் இருந்து வருவதால் வாத்து வளர்ப்பது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. ஏதோ ஒருசிலர் மட்டுமே வாத்துகளை வளர்த்து வருகின்றனர்.

The post கொள்ளிடம் பகுதியில் குறைந்து போனது வாத்து வளர்ப்பு தொழில் appeared first on Dinakaran.

Tags : Kollidham ,Kollidam ,Mayiladuthurai ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் அருகே திரௌபதி அம்மன் கோயில்...