×

விநாயகர் சிலை கரைப்பதில் ஏற்பட்ட போராட்டம் காரணமாக 5 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றதால் பொதுமக்கள் மறியல்

*அதிரடிபடையுடன் போலீசார் குவிப்பால் பரபரப்பு

கீழ்பென்னாத்தூர் : கருங்காலிகுப்பத்தில் விநாயகர் சிலை கரைப்பதில் ஏற்பட்ட போராட்டம் காரணமாக 5 பேரை நள்ளிரவில் விசாரணை அழைத்துச் சென்றதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 18ம் தேதி விநாயகர் சிலை வைத்து வழிபாட்டு நடத்தினர். இச்சிலைகளை கடந்த வெள்ளிக்கிழமை 23ம் தேதி அன்று மாலை கரைப்பதற்காக ஊர்வலம் புறப்பட்ட நிலையில் போலீசார் அருகில் உள்ள குன்னங்குப்பம் பகுதியில் குளத்தில் கரைக்க அனுமதி அளித்தனர்.

ஆனால் பொதுமக்கள் கருங்காலிகுப்பம் ஏரியில் மட்டுமே விநாயகர் சிலை கரைப்போம் என 5 மணி நேரத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சிலைகள் கருங்காலிகுப்பம் ஏரியில் கரைக்கப்பட்டது.

இச்சம்பவத்தின்போது சிலர் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி நேற்றுமுன்தினம் நள்ளிரவு கருங்காலிகுப்பம் காலனி பகுதியை சேர்ந்த 5 பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். நள்ளிரவில் அழைத்துச் சென்ற 5 பேரையும் விடுவிக்க கோரி பொதுமக்கள் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

The post விநாயகர் சிலை கரைப்பதில் ஏற்பட்ட போராட்டம் காரணமாக 5 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றதால் பொதுமக்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Vijayagar ,Vineyagar ,Ebonnathur ,Dinakaran ,Nayakaran ,
× RELATED ஐதராபாத்தில் விநாயகர் சதுர்த்தியில்...