×

கடந்தாண்டு 300 பேர் பாதிப்பு காரைக்காலில் செம்மண் கலரில் குடிநீர் விநியோகம்

*காலரா, வயிற்றுப்போக்கு அச்சத்தில் பொதுமக்கள்

காரைக்கால் : காரைக்காலில் கடந்த ஆண்டு பொது மக்கள் பருகும் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து அதனை பொதுமக்கள் குழந்தைகள் குடித்ததில் காலரா தொற்று ஏற்பட்டது. இந்த அசம்பாவிதத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கடும் வயிற்றுப்போக்கு மற்றும் உடல் உபாதைகளுக்கு ஆளாகினர். இந்த சம்பவம் புதுச்சேரி காரைக்காலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும் காலரா தொற்று ஏற்பட்டு இணை நோய் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது. அப்போது முதல்வர் ரங்கசாமி காரைக்காலில் ஆய்வு மேற்கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிநீர் தொட்டிகள் மற்றும் சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க உத்தரவிட்டதின் பேரில் குடிநீர் தொட்டிகளை சீரமைக்கப்பட்டு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. இந்த ஆண்டும் காலரா தொற்று பரவாமல் பல்வேறு முன்னெச்சரிக்கைகள் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

இந்நிலையில் காரைக்கால் அடுத்த கோட்டச்சேரி ஜீவா நகர் பகுதியில் 3000 பேர் வசித்து வருன்றனர். இங்கு கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் செம்மண் கலரில் அசுத்தமான நீர் வருவதாகவும், இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதாகவும், சமூக வலைத்தளங்களில் புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து குடிநீர் வழங்குவதற்காக கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் அப்பகுதிக்கு குடிநீர் லாரி அனுப்பி வைத்தனர்.

ஆனால் அதிலும் ஒரு திருப்பமாக அதிகாரிகள் கடமைக்கு நடவடிக்கை எடுப்பது போல், பழைய குடிநீர் லாரியை சீரமைக்காமல், துருப்பிடித்த லாரியில் குடிநீரை அவசர அவசரமாக மக்களுக்கு கொண்டு சென்றனர். அந்த குடிநீரிலும் துறுப்பிடித்த இரும்பு துகள்களுடன் குடிநீர் வந்ததால் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்ட பொதுமக்களுக்கு பேரடிதான் விழுந்தது.
இதற்கிடையில் குடிநீர் லாரியானது துருப்பிடித்து சேதமடைந்ததில் லாரியில் ஆங்காங்கே சிறு சிறு ஓட்டைகள் இருந்தது.

அதன் மூலம் குடிநீர் வெளியேறியதால் அதிநவீன கருவியாக நினைத்து வீடு துடைக்கும் துடைப்ப குச்சியை உடைத்து ஓட்டையில் சொருகி வைத்து குடிநீர் கசிவை அடைத்தனர். ஆனாலும் அந்த குச்சியில் இருந்து நீர் வழிந்தோடி வீணாகி வந்தது.இதனைக் கண்ட பொதுமக்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் வைகை ஆற்றில் நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாகோல் போட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுக்கு டப் கொடுத்த கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் என்று கேலி கிண்டல் செய்தனர்.

அதிகாரிகள் அலட்சியம்

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் இப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் படிக்கட்டுகள் உடைந்து மேலே செல்ல வழி இல்லாமல் உள்ளது.கடந்த ஆண்டு அனைத்து குடிநீர் தொட்டிகளும் சீரமைக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்த நிலையில், இதை எப்படி சரி செய்திருப்பார்கள் என்று கேள்வி எழுப்பினர். நோய் தொற்று வருவதற்கு முன்பே குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் எனவும், சேதமடைந்து காணப்படும் அவசர கால குடிநீர் லாரியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கடந்தாண்டு 300 பேர் பாதிப்பு காரைக்காலில் செம்மண் கலரில் குடிநீர் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Karichakal ,Karaikal ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...