×

வேண்டியதை தந்தருளும் வேங்கடவன்

வேங்கடாத்ரி

திருமலைக்கு பல திருநாமங்கள் உண்டு. வேங்கடாத்ரி, வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்திரி, நாராயணாத்ரி, சேஷாத்திரி. இந்தப் பெயர்கள் ஒவ்வொரு யுகத்திலும் நடந்த ஒரு நிகழ்ச்சியின் காரணமாக அமைந்த பெயர்கள். திருமலைக்கு வேங்கடாத்ரி என்று பெயர் எப்படி அமைந்தது? பொருள் என்ன? ‘‘வேங்கடம் ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே’’ என்பது ஆழ்வார் பாசுரம். இது மூன்று சொற்கள் கூடியது. வேம்+கடம்+அத்ரி = வேங்கடாத்ரி. கடம் என்றால் வினைகள், பாவங்கள்.

வேம் என்றால் எரிக்கக் கூடியது. வினைகளை, பாவங்களை எரிக்கக்கூடிய சக்திவாய்ந்த மலை வேங்கடாத்ரி. (அத்ரி என்றால் மலை).

கருடாத்ரி

ஒரு காலத்தில் மகா பிரளயம் ஏற்பட்டு, உலகம் முழுவதும் கடல் நீரின் அடியில் மூழ்கிவிட்டது. இரண்யாட்சன் என்ற அசுரன், பூமியை எடுத்துக் கொண்டு போய் மறைத்து வைத்துவிட்டான். அப்போது பெருமாள் வராக அவதாரம் எடுத்து, இரணியாட்சனுடன் போர் புரிந்து, பூமியை மீட்டு வெளிக் கொணர்ந்தார். பூமாதேவிக்கு எந்தத் தொந்தரவும் வராமல் காக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக கருடனை அழைத்து வைகுண்டத்திற்குச் சென்று ஒரு மலையை எடுத்து வரும்படியாக
உத்தரவிட்டார்.

கருடாழ்வார் உடனடியாக வைகுந்தத்தில் இருந்து வண்ணமயமான ஒரு பொன்மலையை எடுத்துக் கொண்டு வந்து இங்கு வைத்தார். பெருமாள், அந்த திருமலையின் மீது ஏறி, திருக்குளத்தின் கரையில் எழுந்தருளினார். அப்படி கருடனால் கொண்டுவரப்பட்ட மலைக்கு கருடாத்ரி என்று பெயர். இத்தலம் வேங்கடவன் சந்நதியாக இருந்தாலும், ஆதியில் இது “வராகத் திருத்தலம்”.

வ்ருஷபாத்ரி

ஒரு காலத்திலே வ்ருபாசூரன் என்ற அசுரன் இருந்தான். அவன் பகவானை நோக்கி கடும் தவம் இருந்தான். தினசரி புஷ்பம் சமர்ப்பிக்கும் போது, தன்னுடைய தலையையும் வெட்டி சமர்ப்பித்து வந்தான். பெருமாள், அவனுடைய தலை உடனடியாக புதிதாக முளைக்கும் படியாக வரமளித்தார். ஆயினும் இவன் விடாமல் ஏதோ ஒரு நோக்கத்திற்காக செய்து வருகின்றான் என்று தெரிந்தவுடன், ‘‘என்ன காரணத்திற்காக தவம் செய்கிறாய்?’’ என்று கேட்க, அசுரன் சொன்னான், ‘‘வெகு நாட்களாக போர் செய்ய முடியாததால் என் தோள்கள் தினவெடுக்கின்றன. எனவே நீங்கள் என்னோடு போர் செய்ய வேண்டும்.

என்னுடைய போர் ஆசையைத் தணிக்க வேண்டும்” என்று பேராசையை வெளியிட்டான். பகவானும் வேறுவழியின்றி, அவனோடு வெகுகாலம் போர் புரிந்தார். அவன் ஆசை தீர்ந்த போது, முடிவில் பிரார்த்தனை செய்தான். ‘‘பகவானே! நாம் சண்டையிட்ட இந்த மலையில், தாங்கள் என்றைக்கும் இருந்து மக்களுக்கு அருள் புரிய வேண்டும். இந்த மலை என்னுடைய பெயரில் வழங்கவேண்டும்.’’ என்று கேட்டான். அன்றிலிருந்து இந்த குன்றுக்கு “வ்ருஷபாத்திரி” என்று பெயர் ஏற்பட்டது.

அஞ்சனாத்ரி

கேசரி என்பவன் சிவபெருமானைக் குறித்து தவம் செய்தான். அந்த தவத்தின் பயனால் அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் குழந்தைக்கு அஞ்சனை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அந்த அஞ்சனை மிகவும் பக்தி மிக்கவள். திருமலையில் ஆகாச கங்கை என்ற புனித தீர்த்தக் கரையில் வெகுகாலம் தவமிருந்தாள். உண்ணாது உறங்காது அவள் தவம் இருக்கும்பொழுது, அவள் மீது பரிவு கொண்ட வாயுபகவான், அவளுக்கு தினசரி ஒரு பழத்தை பிரசாதமாகக் கொடுத்தான். அந்தப் பழத்தின் சக்தியினால் அஞ்சனாவுக்கு ஒரு ஆண் குழந்தை வானர வடிவில் பிறந்தது.

மிகுந்த சக்தி வாய்ந்த அந்தக் குழந்தை அப்போது உதயமாகிக் கொண்டிருந்த சூரியனை, சிவந்த பழமாகக் கருதி உண்ணுவதற்கு சென்றது. அப்பொழுது தேவர்கள் பிரம்ம தேவனிடம் முறையிட, பிரம்மதேவன் தனது தண்டத்தால் அக் குழந்தையின் தலையில் தட்ட, அது மூர்ச்சித்து விழுந்தது. தாயான அஞ்சனாதேவி பதறி, பிரம்மனைக் குறித்து தவம் செய்ய, பிரம்மன் அக்குழந்தையை ஆசீர்வதித்து, பெரும் புகழ் பெறும் சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரமளித்தார். திருமலையில் அஞ்சனாதேவி தவம் செய்து, வாயுபுத்திரன் அனுமன் பிறந்ததால் “அஞ்சனாத்ரி” என்று பெயர் வழங்கலாயிற்று.

நாராயணாத்ரி

நாராயண முனிவர் என்றொரு முனிவர் இருந்தார். அவர் வெகு காலம் தவம் இருந்தார். பிரம்மதேவன் அவர் முன்தோன்றி அவர் தவத்துக்கு காரணம் கேட்டார். தான் விஷ்ணு பகவானை தரிசிக்க வேண்டும் என்று சொல்ல, “அப்படியானால் நீ திருமலைக்குச் சென்று தவமியற்று” என்று சொல்லி, பிரம்மன் மறைந்தார். அவரும் திருமலைக்கு வந்து வெகுநாட்கள் தவம் இயற்றினார். முனிவரின் தவத்திற்கு இரங்கிய பகவான், அவர் முன்தோன்றி, அவருக்கு முக்திவரம் அளித்ததோடு, அவர் தவம் செய்த மலை அவருடைய திருநாமத்தால் “நாராயணாத்ரி” என்று வழங்கப்படும் என்ற வரமும் அளித்தார். பகவான் ஸ்ரீமன் நாராயணன் நிரந்தரமாக தங்கி அருள் தரும் மலை என்பதாலும் நாராயணாத்ரி என்ற பெயர் பொருந்தும்.

சேஷாத்திரி

என்னதான் விஷ்ணுவினுடைய பக்தர்களாக இருந்தாலும்கூட, அவர்களுக்கும் சில நேரத்தில் கர்வம் வந்து விடுவது உண்டு. சில திருவிளையாடல்களின் மூலமாக பகவான் அந்த கர்வத்தை நீக்கி உணர வைத்து, அவர்களுக்கு உரிய புகழையும், திருவிளையாடலின் மூலம் உறுதிப்படுத்துவது உண்டு. அந்த வகையில் ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும், ‘‘நீ பெரியவனா, நான் பெரியவனா?’’ என்கின்ற சண்டை வந்துவிட்டது. வைகுந்தத்தில் இருந்த ஒரு மலைச் சிகரத்தை ஆதிசேஷன் இறுக்கிப் பிடித்துக் கொள்ளவேண்டும்.

வாயு அதை அசைத்துவிட வேண்டும். யாருடைய முயற்சி வெற்றி பெறுகிறதோ, அவர்களே வென்றவர்கள் என்று முடிவாயிற்று. பகவான் தன் அன்பனான ஆதிசேஷனுக்கு தற்காலிகமாக வந்திருக்கக்கூடிய கர்வத்தையும் அழிக்க வேண்டும். அதே சமயம் அவனுடைய பெருமைக்கும் எந்தக் குறையும் வந்து விடக்கூடாது என்பதற்காக, திருவிளையாடலை நடத்தினார்.

ஆதிசேஷன் ஒரு மலையை இறுக்கமாக பிடித்துக் கொள்ள, வாயு பகவான் அதை அசைக்க முயன்று முடியாமல் போகவே பகவானிடம் பிரார்த்தனை செய்ய, பகவான் நாரதர் மூலம் ஆதிசேஷனுக்கு ஒரு போக்கு காட்ட, அந்த இடைவெளியில், வாயுபகவான் ஆதிசேஷனோடு, மலையைத் தூக்கி பூலோகத்தில் போட்டார். அந்த மலை விழுந்த இடம்தான் திருமலை. இது ஒரு காலத்தில் வைகுந்தத்தில் இருந்தது. ஆதிசேஷன் சுற்றிய மலை என்பதால் இதற்கு சேஷாசலம் அல்லது சேஷாத்திரி என்று பெயர். திருமலையப்பனுக்கும் சேஷாத்திரி என்ற பெயர் உண்டு.

பலப்பல பெயர்கள்

திருமலைக்கு பலப்பல பெயர்கள் உண்டு. பக்தர்களின் எண்ணங்களை ஈடேற்றுவார் என்பதால் “சிகாமணி” என்று பெயர். ஞானத்தை அளிப்பார் என்பதால் ஞானாத்திரி என்று பெயர். சகல புண்ணிய தீர்த்தங்களும், இத்திருத் தலத்தில் நூற்றுக்கணக்கில் இருப்பதால் “தீர்த்தநாத்திரி” என்று பெயர். தங்க மயமாக சிகரங்கள் இருப்பதால் கனகாத்திரி என்று பெயர். ஒரு காலத்தில் நரசிம்ம அவதாரம் எடுக்க பகவான் அவதரித்ததால் நரசிம்மாத்திரி என்று பெயர். வைகுண்டத்தில் இருந்து திருமலை இங்கே வந்து இருப்பதால் வைகுண்டாத்திரி என்றும் பெயருண்டு. அகலகில்லேன் இறையுமென்று, மகாலட்சுமி தாயார், மாலவன் மார்பில் ஒரு நொடியும் பிரியாமல் உறைவதால், திருமகள் வாழும் இதயத்தை கொண்ட பகவான் அருள் புரியும் இடம் என்ற பொருளில், “ஸ்ரீநிவாசம்” என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு.

ஏழு மலை ஏன் சுமக்கிறது?

நம்மாழ்வார்

“குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை,
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே”

– என்று பாசுரம் பாடி இருக்கிறார்.

இதில் திருவிக்கிரம அவதாரத்தையும், கிருஷ்ண அவதாரத்தில் கோவர்த்தன கிரியைத் தூக்கி குடை பிடித்து ஆயர்களைக் காப்பாற்றிய வரலாறும் சொல்லி, அவன் விரும்பி வந்து நின்ற மலை என்பதால், அந்த மலையை வணங்கினாலே உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் என்கிறார். அதில் கிருஷ்ணாவதாரத்தில் மலையை ஏழு நாட்கள் தன்னுடைய விரலால் அவன் சுமந்து கொண்டு இருந்தான். அந்த மலைதான் இங்கே ஏழு மலைகளாக மாறி, எம்பெருமானை நன்றி கடனாகச் சுமந்து கொண்டிருக்கிறது என்று பல பெரியவர்களும் சொல்கிறார்கள். இன்னொரு கோணமும் இருக்கிறது.

பகவானிடம் ஒரு பழக்கம் உண்டு. நாம் ஒரு மடங்கு வைத்தால், அவன் உடனடியாக ஒன்பது மடங்கு வைப்பான். இராமாவதாரத்தில் தம்பியாக பிறந்து, வாழ்நாள் முழுவதும் தன்னுடைய வாழ்க்கையைக் கூட தியாகம் செய்து சேவை செய்த லட்சுமணனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே, கிருஷ்ணாவதாரத்தில் தனக்கு அண்ணனாக பலராமனை பிறக்கவைத்து, “மூத்த நம்பி” என்று பெயர் கொடுத்து, கைங்கரியம் செய்து மகிழ்ந்தான் பகவான். அதாவது “நம்முடைய செயல், அவனுடைய எதிர்செயல்” (Reaction to action) என்பதாகவே அமைந்திருப்பதை கணித்தால், தன்னைத் தாங்கிய மலையை, கிருஷ்ணாவதாரத்தில் ஏழு நாட்கள் தூக்கிக் கொண்டான் என்பதுதான் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

காரணம், கோவர்த்தனகிரியை குடையாக எடுத்தது கிருஷ்ணாவதாரத்தில். ஆனால் அதற்கு முன், வராக அவதார காலத்திலிருந்தே, திருமலை எம்பெருமானைச் சுமந்து ஆனந்தமடைந்தது. “தன்னைத் தாங்கிய மலையைத் தான் தாங்கினான்” என்பது இன்னமும் பொருத்தமாக இருக்கும்.

திருமலைக்கு செல்ல நினைத்தால் என்ன செய்ய வேண்டும்?

திருமங்கையாழ்வார் திருவேங்கடத்தில், பாசுரம் பாடுகின்ற பொழுது வித்தியாசமாகச் சிந்திக்கின்றார். எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்கள், இந்த நாட்டில் இருந்தாலும், எல்லோரும் திருமலையைச் சென்று சேவிப்பது இல்லையே! தனக்கு மட்டும் எப்படி இந்த ஆர்வம் வந்தது என்பதை சிந்தித்த, திருமங்கையாழ்வார் இப்படி பாசுரம் பாடுகிறார்;

“கொங்கலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடங்கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த
புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத்
திரு வேங்கடம் அடை நெஞ்சமே’’

ஒருவன் திருமலைக்கு செல்ல வேண்டும் என்று நெஞ்சார நினைத்தால் ஒழிய அந்த பாக்கியம் கிடைப்பது இல்லை. முயற்சியால் மட்டும் நடப்பது இல்லை என்று சொல்லி, இப்பதிகம் முழுக்க, தன்னுடைய நெஞ்சிற்கு அறிவுரை சொல்லுகின்றார்.

“நெஞ்சகமே! அங்கு செல்ல வேண்டும் என்று நினை!
நெஞ்சார நினைத்தால்தான் போகலாம்.
உன் ஒத்துழைப்பு இன்றிப் போக
முடியாது.”

பலர் திருமலை செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஏதோ ஒரு தடை வரும். ஆனால், அதே நேரத்தில் நினைத்த நேரத்தில் சென்று தரிசனம் செய்துவிட்டு வருகின்ற அன்பர்களும் இருக்கின்றார்கள். இந்த உளவியலை பல்லாண்டுகளுக்கு முன்னர் பாசுரத்தில் திருமங்கை ஆழ்வார் பாடி இருக்கிறார் என்பதுதான் வியப்பு.

தொகுப்பு: நாகலட்சுமி

The post வேண்டியதை தந்தருளும் வேங்கடவன் appeared first on Dinakaran.

Tags : Vengadadadri Tirumalay ,Vengadadadri ,Vrushabadri ,Anjanatri ,Narayanatri ,Seshatri ,Wankadawan ,
× RELATED கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?