×

7,337 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது

திருச்செங்கோடு, செப்.26: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக 7,337 பேர் விண்ணப்பித்துள்ளனர். அந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினரும், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான மதுரா செந்தில், சின்ராஜ் எம்பி, ஈஸ்வரன் எம்எல்ஏ, நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, துணைத்தலைவர் கார்த்திகேயன், அட்மா தலைவர் வட்டூர் தங்கவேலு ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நடந்தது.

விழாவில் கலெக்டர் உமா பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை, பெண்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தி வருகிறார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்பகால பராமரிப்பு, கர்ப்பிணிகள் மற்றும் சிசு மரணத்தை குறைத்தல், மகப்பேறு உதவித்திட்டங்கள், தாய்ப்பாலின் நன்மைகள், இணை உணவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள, தமிழ்நாடு அரசு சமுதாய வளைகாப்பு விழாவை நடத்தி வருகிறது.

சுகாதாரத்துறை சார்பில், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பரிசோதனைகள் மேற்கொள்ள மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு சுவையாகவும், தரமாகவும் உள்ளது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹1,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 7,337 பேர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். அவை பரிசீலனையில் உள்ளன.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு முதல் 100 நாட்கள் மிக முக்கியமான நாட்கள் ஆகும். கருவுற்ற காலங்களில் 10-12 கிலோ எடை கூடினால் மட்டுமே, 3 கிலோ எடையுள்ள குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். இந்த கால கட்டத்தில், கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

விழாவில் கலந்துகொண்ட கர்ப்பிணிகளுக்கு பேரீட்சை, தேன்நெல்லி, கடலைமிட்டாய், ஆப்பிள், ஆரஞ்சு, வளையல், பூ, மஞ்சள் மற்றும் 5 வகை உணவுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், ஆர்டிஓ சுகந்தி, யூனியன் சேர்மன் சுஜாதா தங்கவேல், துணை சேர்மன் ராஜபாண்டி ராஜவேல், வக்கீல் அணி தலைவர் சுரேஷ்பாபு, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் (பொ) மோகனா, அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, நகர்மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post 7,337 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Dinakaran ,
× RELATED பள்ளி அருகே செயல்படும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு